துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்
பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
இது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இச் சம்பவம் குறித்து மேற்கு யார்க்ஷயர் போலீஸ் மற்றும் குற்றவியல் துறை ஆணையர்கள் வெளியிட்ட அறிக்கையில், நேரில் பார்த்த பல சாட்சிகளிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தியிருப்பதாகவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.
ஜோ காக்ஸ் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள டேவிட் கேமரன், ”ஜோ காக்ஸ் மரணம் ஒரு துயரச் சம்பவம். அவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, அக்கறை கொண்ட எம்.பி. அவரது கணவர் பிரேண்டன் மற்றும் இரண்டு இளம் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் தெரஸா மே உள்பட மேலும் பல தலைவர்கள் ஜோ காக்ஸ் மறைவுக்கு இரங்கல்தெரிவித்துள்ளனர்
.