துணியால் ஆன முககவசத்தை சுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கோபாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை முடக்கி போட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது. வைரசிடம் இருந்து மக்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் சமூக இடைவெளி, தனித்து இருத்தல், முககவசம் அணிதல், அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுதல் போன்றவற்றை அரசு அறிவுறுத்தி வருகிறது. அதில் முககவசம் தான் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் கேடயமாக விளங்கி வருகிறது.
முககவசம் அணியாமல் வெளியில் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதில் இருந்து அதன் முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். இதன்காரணமாக மக்கள் முககவசம் அணியும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
துணியால் ஆன முககவசம் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு ரோட்டோர கடைகளில் கூட விற்பனைக்கு வந்து விட்டது. ரூ.5 முதல் ரூ.35 வரை துணியால் ஆன முககவசம் கிடைக்கிறது. ஏற்கனவே பலர் கைக்குட்டை, துண்டு ஆகியவற்றை முககவசமாக பயன்படுத்தி வந்தனர். அவர்களும் தற்போது முககவசத்துக்கு மாறி உள்ளனர். இந்த முககவசம் பெயரளவுக்கு அணியும் வகையில் இருக்கக் கூடாது. அதை முறையாக பராமரித்து அணிய வேண்டும். அப்போது தான் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடமுடியும்.
எனவே பொதுமக்கள் முககவசத்தை எப்படி உபயோகிப்பது என்பது குறித்து திருப்பூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-
பொதுவாக ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான முககவசம் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் 3 அடுக்கு முககவசம் அல்லது துணியால் ஆன முககவசங்களை அணிந்தால் போதுமானது. ஒவன் துணியால் ஆன 3 அடுக்கு முககவசம் மற்றும் என்.95 முககவசம் வைரஸ் நுழையாமல் தடுக்கும்.
3 அடுக்கு முககவசத்தை ஒருமுறை பயன்படுத்த முடியும். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், மக்களிடம் அதிக தொடர்பில் இருப்பவர்கள் இதை பயன்படுத்துகிறார்கள். 6 மணி முதல் அதிகபட்சமாக 8 மணி நேரம் இந்த முககவசத்தை பயன்படுத்த முடியும். அதன்பிறகு அவற்றை அழித்துவிட வேண்டும். என்.95 முககவசம் என்பது விலை அதிகம். கொரோனா நோயாளிகளை கையாளக்கூடிய மருத்துவக்குழுவினர் இந்த முககவசத்தை பயன்படுத்துகிறார்கள்.
பொதுமக்கள் துணியால் ஆன முககவசத்தை தற்போது அணிந்து வருகிறார்கள். இவர்கள் தினமும் முககவசம் வாங்குவது என்பது சிரமம். இதற்காக மீண்டும் துவைத்து பயன்படுத்தக்கூடிய துணி முககவசங்களை அணிந்து வருகிறார்கள். 3 துணி முககவசங்களை ஒருவர் வைத்துக்கொண்டால் அவற்றை துவைத்து சுழற்சிமுறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருநாள் பயன்படுத்திய முககவசத்தை துவைத்து அதை 3 நாட்கள் கழித்து மீண்டும் பயன்படுத்தலாம்.
முககவசத்தை முன்பகுதியில் கைகளால் தொடக்கூடாது. இது நோய் கிருமிகள் நமக்குள் எளிதில் பரவும் வாய்ப்பை ஏற்படுத்தும். முககவசத்தை கழற்றும்போது கயிற்றை பிடித்து மட்டுமே கழற்ற வேண்டும்.
துணி முககவசம் என்பது தற்காத்துக்கொள்வதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். முககவசத்துடன் தான் வெளியில் சுற்றித்திரிய வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இதனால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். முககவசத்தை கவனமுடன் கையாள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]