தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில் அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளது. ஆனால் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இல்லாத மிக முக்கியமான கூட்டாளி என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா செய்து வந்தது.
ராணுவத் தளவாடங்கள், தொழில்நுட்பங்களை அளித்து வந்தது. அமெரிக்க அதிபராக கடந்தாண்டு ஜனவரியில், டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்காததை அமெரிக்கா கண்டித்து வந்தது. பாகிஸ்தானுக்கு, கடந்த, 2016ல், 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
அதில், 1,436 கோடி ரூபாயை, டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் நேற்று டுவிட்டரில் டிரம்ப் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, கடந்த, 15 ஆண்டுகளில், 2 லட்சம் கோடி ரூபாயை நிதி உதவியை முட்டாள்தனமாக வழங்கி வந்துள்ளது. அமெரிக்க தலைவர்களை முட்டாள்கள் என்று நினைத்துள்ள பாகிஸ்தான், அதற்கு பிரதிபலனாக பொய் மற்றும் ஏமாற்றத்தையே அளித்து வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்கும் நமது நடவடிக்கைகளுக்கு எந்த உதவியும் செய்யாமல், அவர்களுக்கு புகலிடம் அளித்து வருகிறது. பாக்கிற்கு இனி நிதியுதவி கிடைக்காது.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு இனி நிதிஉதவி கிடையாது என்பதை, மிகவும் கடுமையான வார்த்தைகளில் டிரம்ப் கூறியுள்ளது, புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இதனை இந்தியா வரவேற்றுள்ளது.
தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் உதவி வருகிறது என்ற இந்தியாவின் நிலைப்பாடு நிருபிக்கப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவு துறை கூறியுள்ளது.