தீவிரவாதக் குழுக்களை நோக்கி பெண்களை ஈர்க்கும் வகையில் தெக்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan) அமைப்பு தனி இதழ் தொடங்கியுள்ளது.
ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்த இதழுக்கு ‘Sunnat E Khaula’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘கவுலாவின் வழியில் ‘ என்பது இதன் அர்த்தம். கவுலா என்பவர் முகமது நபியின் பெண் சீடர் ஆவார். ‘நாங்கள் ஜிகாத்துக்குப் பெண்களை வரவேற்கிறோம். இஸ்லாத்தின் புனிதப் போரில் பங்கேற்றுக் கொள்ளுங்கள் ” என முதல் எடிட்டோரியல் பக்கம் பெண்களைத் தூண்டுகிறது.
பாகிஸ்தான் தாலிபான் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஃபஸ்ல்லா கோராஸானியின் மனைவியின் பேட்டி இடம் பெற்றுள்ளது. அவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ”பதினான்கு வயதில் திருமணம் முடித்தேன். கணவர் தீவிரவாதக்குழுத் தலைவராக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கவில்லை. இளம் வயதிலேயே குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும். இல்லையென்றால் ஒழுக்கக் கேட்டுக்கு காரணமாக அமையும்” எனக் கூறியுள்ளார்.
இலக்கியப் பக்கத்தில் ஜிகாத்தின் கடமைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. கற்றுக் கொள்வோம் பகுதியில் சிறிய ரக ஆயுதங்களை இயக்குவது, கிரானைட்டுகளைக் கையாள்வது குறித்த விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே ஆங்கிலம் மற்றும் உருதுவில் தெக்ரிக் இ தாலிபான் இயக்கம் இதழ்கள், பத்திரிகைகள் நடத்தி வந்தாலும், பெண்களுக்காக தனி இதழ் தொடங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
2014-ம் ஆண்டு பெஷாவாரில் ராணுவத்தினருக்குச் சொந்தமான பள்ளியில் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உள்பட 150 பேர் பலியானது. கடந்த மாதத்தில் லாகூரில் சந்தைப் பகுதியில் குண்டு வெடித்ததில் 26 பேர் இறந்துபோன சம்பவங்களுக்கு இந்தக் குழுதான் காரணம்.