இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
சம்பள பிரச்சினைக்கு பிரதமர் முன்வைத்த யோசனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பள பிரச்சினைக்கு தீர்வு ஒரு கட்டமாக வழங்கப்பட வேண்டும். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. 21ஆம் திகதிக்கு முன்னர் தீர்வை பெற்றுத் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவும் குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைக்க சமூகமளிக்காவிட்டால் ஆசிரியர்களுக்கு எதிராக வீதிக்கிறங்கி போராடுவதாக பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்கும் பெற்றோர் அமைப்பினர் தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் நேற்று முன்தினம் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று பேச்சுவார்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுபோதினி குழுவின் அறிக்கையை ஒரு பகுதியையாவது செயற்படுத்துமாறு வலியுறுத்தினோம். இருப்பினும் எமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படவில்லை. அமைச்சரவை உபகுழு கடந்த ஆகஸ்ட் மாதம் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகிறது.
மூன்று கட்டங்களின் கீழ், சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்தது. இருப்பினும் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு கட்டங்களாக பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. இதற்கு தொழிற்சங்கத்தினர் அவ்வேளையில் இணக்கம், தெரிவிக்கவுமில்லை, மறுப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் அரசாங்க தரப்பின் யோசனை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
சம்பள அதிகரிப்பை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு கட்டமாகவும், 2023ஆம் ஆண்டு மிகுதி இருக்கட்டதாகவும் செயற்படுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டார். இதனால் எவ்வித பயனும் ஆசிரியர்களுக்கு கிடைக்கப் பெறாது. இவர்கள் குறிப்பிடுவதை கட்டம் கட்டமாக சம்பளத்தை அதிகரிக்கும் போது முதல்கட்டத்தில் 15 ஆம் தர ஆசிரியர்களக்கு 3,750 ரூபாவில் 1,250 ரூபாவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6,580 ரூபாவில் 2,193 ரூபா மாத்திரம் அதிகரிக்கப்படும். இதனை ஏற்க முடியாது. ஆகவே ஒரு கட்டமாகவே சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். என்ற கோரிக்கையில் தொடர்ந்து உறுதியாக உள்ளோம்.
சுபோதினி குழு அறிக்கையினை செயற்படுத்த முடியாது. என அரசாங்கம் குறிப்பிடுகிறது. இரு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்கத்தினர் தயாரித்த யோசனையை கல்வி அமைச்சரிடம் கடந்த 4 ஆம் திகதி கையளித்தோம்.அவர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்தாரா, இல்லையா என்பது தொடர்பில் எமக்கு தெரியாது. ஆகவே முரன்பாடற்ற தீர்வை கோருகிறோம். தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்காமல் அரசாங்கம் பாடசாலைகளை திறக்க முயற்சிப்பது தான்தோன்றினமான செயற்பாடாகும்.என்றார்.
ஆசிரியர் – அதிபர் சேவையில் சுமார் 24 வருட காலமாக நிலவும் சம்பள பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் கடந்த மூன்று மாத காலமாக நிகழ்நிலை கற்பித்தல் கடமையில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும், பிரதமருக்கும், ஏனைய தரப்பினருக்கும் இடையில் பல கட்டமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதற்மைய பிரதமர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி தரம் 1 தொடக்கம் 5 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை முதற்கட்டமாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீர்வு கிடைக்காவிட்டால் சேவையில் ஈடுப்படமாட்டோம். என தொழிற்சங்கத்தினர் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளனர்.
21 ஆம் திகதி ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காவிட்டால் ஆசிரியர்களுக்கு எதிராக வீதிக்கிறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவதாக பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்கும் பெற்றோர் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]