உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 16 பிடிகளைத் தவறவிட்டு, அரை இறுதி வாய்ப்பை இழந்த இலங்கை, இப்போது சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பையும் இழக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நெதர்லாந்துக்கு எதிராக புதன்கிழமை (08) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றதை அடுத்து அணிகள் நிலையில் இலங்கை 9ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
எனவே, நியூஸிலாந்துக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (09) நடைபெறவுள்ள தனது கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்றாலன்றி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பும் இலங்கைக்கு அற்றுப்போய்விடும்.
இதேவேளை, பெங்களூரில் காலை 10 மணியளவில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் மாலையில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் இலங்கைக்கு ஒரு புள்ளி கிடைத்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
எவ்வாறாயினும் இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மோசமான பெறுபேறுகளைக் கொண்டுள்ள இலங்கை தனது கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியுடனாவது நாடு திரும்புவதற்கு முயற்சிக்கவுள்ளது.
ஆனால், நியூஸிலாந்தை வீழ்த்துவது இலங்கைக்கு பெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நான்காவது அணியாக தகுதி பெறுவதற்கு நியூஸிலாந்து கடுமையாக போட்டியிடவுள்ளது.
எனவே, இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்கதாக அமையவுள்ளது.
இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இந்தியாவுடனான போட்டியை தவிர்ந்த மற்றைய எல்லா போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் இலங்கை திறமையாக செயல்பட்டுள்ளதை மறுக்க முடியாது. ஆனால், மோசமான பந்துவீச்சும் களத்தடுப்புமே அதன் தோல்விகளுக்கு காரணமாக இருந்துள்ளது.
இதேவேளை, ஆரம்பத் துடுப்பாட்டமும் சோபிக்காதது இலங்கைக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் பெத்தும் நிஸ்ஸன்க மாத்திரமே ஒரு போட்டியைத் தவிர்ந்த மற்றெல்லாப் போட்டிகளிலும் திறமையாக துடுப்பெடுத்தாடி வந்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக பயன்படுத்தப்பட்ட குசல் பெரேரா, திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் பிரகாசிக்கத் தவறியதால் இலங்கைக்கு சிறந்த ஆரம்பங்கள் இட்டுக்கொடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக ஏனைய வீரர்கள் அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
எவ்வாறாயினும் சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, குசல் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெற உதவினர்.
பந்துவீச்சில் திறமையாக செயற்பட்டுவரும் டில்ஷான் மதுஷன்க மொத்தமாக 21 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆனால், அவருக்கு பக்கபலமாக ஏனைய பந்துவீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தாதது பந்துவீச்சில் பெருங்குறையாக இருந்துவருகிறது.
அது மட்டுமல்லாமல், இலங்கையின் களத்தடுப்பும் எதிர்ப்பார்த்தளவு சிறப்பாக அமையவில்லை.
இலங்கை அணியினர் மொத்தமாக 16 பிடிகளைத் தவறவிட்டுள்ளமை சிந்திக்கவேண்டிய விடயம் என உதவிப் பயிற்றுநர் நவீட் நவாஸ் சுட்டிக்காட்டினார்.
எனவே, நியூஸிலாந்துடனான போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் இலங்கை அணியினர் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் எனவும் இது குறித்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது, இவ்வாறிருக்க, பெங்களூரில் பாகிஸ்தானுடனான போட்டியில் 401 ஓட்டங்களைக் குவித்தும் மழை குறுக்கிட்டதால் துரதிர்ஷ்டவசமாக டக்வேர்த் லூயிஸ் முறைமையில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து, தனது அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்வதற்கு கடுமையாக முயற்சிக்கவுள்ளது.
தனது முதல் நான்கு போட்டிகளில் அபார வெற்றிகளை ஈட்டிய நியூஸிலாந்து கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவியது. இந்தத் தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டும் குறிக்கோளுடன் நியூஸிலாந்து இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் அல்லது திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, துஷமன்த சமீர, கசுன் ராஜித்த, டில்ஷான் மதுஷன்க.
நியூஸிலாந்து: டெவன் கொன்வே, ரச்சின் ரவிந்த்ரா, கேன் வில்லியம்சன் (தலைவர்), டெரில் மிச்செல், மார்க் செப்மன், க்ளென் பிலிப்ஸ், மிச்செல் சென்ட்னர், டொம் லெதம், இஷ் சோதி, டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட்.