தீர்க்கமான ஒரு செய்தியைச் சொல்லிய எழுக தமிழ் பேரணி..!
அத்துடன், இந்த அஹிம்சைப் போராட்டத்தில் அலைகடலெனத் திரண்டெழுந்த மக்கள் எழுச்சியானது ஒரு தீர்க்கமான செய்தியைச் சொல்லி நிற்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தமிழ்மக்கள் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் ஆலய முன்றலில் மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள் வெள்ளமாக குவிந்தமை ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மேலும், வரலாற்றுப் புகழ்மிக்க யாழ். கோட்டைச் சூழலில் மக்கள் வெள்ளம் கூடி தமிழரின் பிரகடனத்தை உரக்கக்கூறி வெளியிட வடக்கின் முதல்வரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ. வி விக்னேஸ்வரன் தமிழரின் நிலைப்பாட்டை மிகவும் கம்பீரமாகவும், தெளிவாகவும் கூறியமையானது,
தமிழர் நாம் எவ்வேளையிலும் எமது தியாகங்களை வீண்போக விடப்போவதில்லை என்ற செய்தியையும் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்கத்தயார் இல்லை என்ற செய்தியையும் மிகவும் தெளிவாக எடுத்துக்கூறி நிற்கின்றது.
இம்மாபெரும் எழுச்சிக்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அலைகடலென திரண்டு வந்த மக்களின் உணர்வுகளுக்குத் தமிழ் மக்கள் பேரவை சிரம் தாழ்த்தி வணங்குகின்றது.
இப்போராட்டத்தில் மிகப்பெரும் பங்காற்றிய மதகுருமார்கள் அனைவரையும் முதற்கண் வணங்கி நிற்கின்றோம்.
மேலும், இப்பேரணிக்கு தமது முழு ஆதரவையும் வழங்கியது மட்டுமின்றிப் பல வழிகளிலும் உதவிகள் புரிந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரதும் எழுச்சி கண்டு இறும்பூதெய்துகிறோம்.
நேரடியாகப் பல அழுத்தங்கள் வந்த வேளையிலும், தாமாக முன்வந்து தமது வர்த்தக நிலையங்களை முற்றாக மூடி எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்ட எமதருமை வர்த்தகப் பெருமக்களின் உணர்வு மிக்க செயல் எங்கள் வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவமாகும்.
இதேபோல் தமது நாள் தொழிலைத் தியாகம் செய்து தமது உணர்வுகளை வெளிக்காட்டிப் பேரணியில் பங்குகொண்ட கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் ஏனைய நாள் தொழில் செய்பவர்களையும், மற்றும் பல்வேறு உத்தியோகத்தர்கள், தனி நபர்கள், மகளிர் அமைப்புக்கள், கழகங்கள், பொது அமைப்புக்கள் என அனைவரதும் எழுச்சி கண்டு தமிழ் மக்கள் பேரவை பெருமை அடைகின்றது.
மேலும், இப்பேரணிக்குப் பல இடர்கள் மத்தியிலும் போக்குவரத்து வசதிகள் மேற்கொண்ட போக்குவரத்துச் சங்கங்கள் அனைத்தினதும் இனப்பற்றை நன்றி உணர்வோடு தமிழ் மக்கள் பேரவை நோக்குகின்றது.
அதேவேளை, இப்பேரணியின் வெற்றிக்கு அயராது உழைத்த தேசியப்பற்றுள்ள ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நாம் என்றும் தலை வணங்கி நிற்பதுடன் அவர்களின் தேசப்பற்று எமது எதிர்காலச் செயற்திட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்களுமில்லை என்பதனையும் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
இதேபோல், அரசியல் சுய இலாபம் கருதிய ஒரு சில சக்திகள் பேரணியை குழப்புவதற்காக பல வழிகளிலும் முயன்றபோதும் அவற்றையெல்லாம் உதாசீனம் செய்து தடைகளெல்லாம் கடந்து வந்து தமது எழுக தமிழ் கோஷம் வானதிர முழங்கிய எம் தமிழ் உள்ளங்களையும், அவர்களின் தேசப்பற்று, மற்றும் தமிழ்ப் பற்றையும் பார்க்கும் போது எம்தேசத்தில் எத்தகைய இடர்கள் வரினும், இம்மண் ஒருபோதும் தியாகங்களை மறந்து அடங்கிப் போய்த் தமது உரிமைகளைக் கைவிடாது என்ற செய்தியை மிகத்தெளிவாகச் சொல்லி நிற்கின்றது.