தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்மீது இரும்புக்கரங்களால் ஒடுக்குமுறை இடம்பெறுவது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு வடிவமே எனச் சாடியிருக்கும் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த்தேசிய அவதானிப்புமையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
கருத்துச் சுதந்திரம்மீது இரும்புக்கரம்
கருத்துச் சுதந்திரம் என்பது மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் 19 வது பிரிவில் உள்ள அடிப்படை மனித உரிமையாகும். ஆனால் அதைத் தடுக்க பல வழிகளைக் கண்டுபிடித்து தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கிவரும் சிறிலங்கா அரசாங்கம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழர் தாயகத்தில் தெடர்ச்சியாக கருத்துச் சுதந்திரத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவதை கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு வடிவமாகவே தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் பார்க்கின்றது.
சிறிலங்கா அரசினது மோசமான அரச வன்முறைகளையும் அரசின் மோசமான கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தடுக்கும்வகையில் அண்மையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் ஒன்றினைக் கொண்டுவந்தது சிறிலங்க அரசாங்கம். இது நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தாலும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்திற்கு அப்பால் ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளி தனது படைப்பு ஒன்றினை வெளியீடு செய்ய முடியாத மிக மோசமான நிலையே காணப்படுகின்றது.
தீபச்செல்வனிடம் விசாரணை
அந்தவகையில்தான் அண்மையில் புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரான தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் 34 நாட்களில் நீந்திகக் கடந்த நெருப்பாறு என்ற புத்தகம் எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கிளிநொச்சியின் மூத்த எழுத்தளார் நா. யோகேந்திரநாதனை மதிப்பளிப்பு செய்யும் நோக்கிலேயே குறித்த நூல் வெளியீட்டு விழா நடத்தப்பட்ட போதிலும் இறுதி யுத்த அவலங்களை அம்பலப்படுத்தியே நூல் எழுதப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சுமார் இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த புத்தகவெளியீட்டினை நடாத்தியமை தொடர்பாகவே தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த புத்தகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்கில் எழுதப்பட்டதா என்றும் விசாரணையின் போது தன்னிடம் கேட்கப்பட்டதாக தீபச்செல்வன் கூறியுள்ளார்.
நடுகல், பயங்கரவாதி, நான் ஸ்ரீலங்கன் இல்லை போன்ற நூல்கள் வாயிலாக உலகறியப்பட்ட தீபச்செல்வன், இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழ் இனத்தின் பாடுகளையும் நீதிக்கான ஏக்கங்களையும் தன் எழுத்துக்களில் பேசிவருவதுடன், ஒரு ஆசிரியராகவும் கடமையாற்றி வருகிறார். மாபெரும் அச்சுறுத்தல் களத்திலும் துணிந்து குரல் கொடுக்கும் ஒரு எழுத்தாளனின் குரலை நசுக்கவே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
43 ஊடகவியலாளர்கள் படுகொலை
முள்ளிவாய்க்காலில் தமிழ் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மொனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தில் தீவிரம் பெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகள் மற்றும் எமது சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்படுவதும், கடுமையாக அச்சுறுத்தப்படுவதும் தொடர்கதை ஆகிவிட்டது. அவ்வகையில்தான் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் மீதும் அவரை அச்சுறுத்தும் வகையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
சிறிலங்கா அரசானது யுத்த காலத்திலும் சரி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் சரி கருத்துச் சுதந்திரத்தின் மீது மிக மோசமான வன்முறையை ஏவிவருகின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் யுத்த காலத்தில் 43 ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கொலைகளை ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் கண்டித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் இன்று யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் சிறலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான அடக்குமுறைகள் தொடர்ந்திருக்காது.
எனவே தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவருவது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு வடிவமே சுட்டிக்காட்டுவதோடு புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டமையையும் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.