தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ‘தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர் சரவணன் அருள் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘உல்லாசம்’, ‘விசில்’ ஆகிய படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இதில் புதுமுக நடிகர் சரவணன் அருள் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஊர்வசி ரவூத்லா நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர்கள் விஜயகுமார், பிரபு, மூத்த நடிகை லதா, ரோபோ ஷங்கர், மயில்சாமி, நடிகை ஐரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். த லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தொழிலதிபர் சரவணன் அருள் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கிறார்.
‘தி லெஜண்ட்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. முன்னோட்டத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் சரவணன் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரம்மாண்டமான பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள், அரங்க வடிவமைப்பு ஆகியவை இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.
நுகர்வோர் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பு என்பதாலும், அதன் உரிமையாளர் சரவணன் அருள் நடிப்பில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படத்திற்கு திரையுலக வணிகர்களிடமும் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.