அம்பாறையில் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக நம்பப்படும் “திஹே கல்லிய” எனும் இனவாத அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திந்து பேச மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. குறித்த பேரினவாத அமைப்புக்கு பக்கபலமாக பொதுபல சேனா அமைப்பு இருந்து வருவதாக தெரியவருகிறது.
அம்பாறையில் கைதுசெய்யப்பட்ட “திஹே கல்லிய” அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்கும் நோக்கிலும், மேலும் கைதுசெய்யப்படவிருப்பவர்களை தடுக்கும் நோக்கிலும் ஜனாதிபதியின் அம்பாறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், மொட்டு அணி உறுப்பினர் ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரும் நேற்று (01) ஜனாதிபதியை சந்திக்க பொலன்னறுவைக்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி பொலன்னறுவை சென்றதை கேள்விக்கப்பட்ட இக்குழுவினர், நேற்று காலை முதல் இரவு வரை அவரை சந்திப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், ஜனாதிபதியின் வாயிற்கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த நிலையில் குறித்த குழுவினர் திரும்பிவந்துள்ளனர்.
இதேவேளை, பொதுபல சேனாவின் முக்கியஸ்தர்கள் பலரும் தற்போது அம்பாறை மாவட்டத்தில் மையம்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயக்கல்லிமலை சிலை வைப்பு விவகாரத்தில் குறித்த “திஹே கல்லிய” பேரினவாத அமைப்பு பின்னணியில் இருந்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.