யாழ்ப்பாணத்தில் உள்ள தியாகி லெப்.கேணல் திலிபனின் நினைவு தூபியினை அமைப்தில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனினால் ஒதுக்கப்பட்ட 2 இலட்சம் ரூபாவில் அத் தூபியினை புணரமைப்பதற்கான நடவடிக்கையினை யாழ்.மாநகர சபை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் பின்புறமாக உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் தியாகி லெப்.கேணல் திலிபனின் நினைவு தூபி அமைக்கப்பட்டிருந்தது. குறித்த தூபியானது பின்னர் உடைக்கப்பட்டு, தற்போது அத்தூபியின் அடிப்பாகம் மட்டுமே காணப்படுகின்றது.
இத் தூபியினை புணரமைத்து பாதுகாப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 2 இலட்சம் ரூபாவினை ஒதுக்கியிருந்தார். இப் பணத்தினைக் கொண்டு தூபியினை புணரமைப்பதில் தடைகள் இருப்பதாக காரணம் காட்டி, மாநகர சபையினர் புணரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தனர்.
இந்நிலையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்ட போது, குறித்த தூபி அமைந்துள்ள காணி நல்லூர் ஆலயத்திற்குச் சொந்தமானதால் அதனை புணரமைப்பதில் சிக்கல் நிலவி வருகின்றது என்று மாநாகர நபை ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நல்லூர் ஆலய நிர்வாகத்திடம் ஒப்புதன் பெற்ற பின்னர் தூபியின் புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்தார். இதன்படி அவ்வொப்புதலை பெற்றுத்தருவதாக நான் அக் கூட்டத்தில் உறுதியளித்திருந்தேன்.
இது தொடர்பில் நல்லூர் ஆலய நிர்வாகத்தினருடன் பேசிய பின்னர், திலீபனின் நினைவு தூபி புணரமைத்து பாதுகாக்கப்படுவதில் காணி தொடர்பான எந்த பிரச்சினையும் இல்லை என்பதை தெரிவித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளேன்.
இருப்பினும் தூபி அமைப்பது தொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஒதுக்கிய நிதி இவ்வருடத்தில் செலவிடப்பட வேண்டும். எனவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் திலீபனின் நினைவு தூபியினை புணரமைத்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை மாநாகர சபையினர் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.
குறித்த தூபியானது இக்கட்டான காலப்பகுதியில் மாநாகர சவையினால் அமைக்கப்பட்டது. எனவே அதனை மீண்டும் புணரமைத்து பாதுகாப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படப் போவதில்லை. எனவே இப் புணரமைப்பு நடவடிக்கைகளை வடமாகாண முதலமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.