பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் 25ஆவது லீக் போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை 156 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
அணிக்கு மீளழைக்கப்பட்ட முன்னாள் அணித் தலைவர் சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் சிறப்பாக பந்துவீசி இரண்டு இணைப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்பத்தி இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.
அத்துடன் பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் மெத்யூஸ் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தெரிவாளர்களை சிந்திக்கவைத்துள்ளார்.
உலகக் கிண்ணத்திற்கான இறுதி குழாம் அறிவிக்கப்பட்டபோது ப்ரமோதய விக்ரமசிங்க தலைமையிலான தெரிவுக் குழுவினர் ஏஞ்சலோ மெத்யூஸை இறுதி அணியில் சேர்ப்பது குறித்து கவனம் செலுத்தாது எவ்வளவு தவறு என்பதை மெத்யூஸின் இன்றைய ஆற்றல்கள் புரிய வைத்திருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
மெத்யூஸின் ஆற்றலுடன் லஹிரு குமார, கசுன் ராஜித்த, மஹீஷ் தீக்ன ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் பெத்தும் நிஸ்ஸன்க, சதீர சமரவிக்ரம ஆகியோரின் ஆட்டம் இழக்காத அரைச் சதங்களும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தன.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 157 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 25.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
உலகக் கிண்ண வரலாற்றில் இங்கிலாந்தை இலங்கை வெற்றிகொண்டது இது 5ஆவது தொடர்ச்சியான தடவையாகும். 2007, 2011, 2015, 2019 ஆகிய உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.
இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் இலங்கை 5ஆம் இடத்திற்கு முன்னேறியது.
எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
உலகக் கிண்ணத்தில் 2ஆவது தொடர்ச்சியான தடவையாக இரண்டு குசல்களும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
குசல் பெரேரா 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கவனக் குறைவான அடியினால் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் குசல் மெண்டிஸ் தவறான அடி தெரிவினால் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும் பெத்தும் நிஸ்ஸன்கவும் சதீர சமரவிக்ரமவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 137 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.
பெத்தும் நிஸ்ஸன்க 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 77 ஓட்டங்களுடனும் சதீர சமரவிக்ரம 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 65 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இந்த உலகக் கிண்ண அத்தியாயத்தில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த 4ஆவது தொடர்ச்சியான அரைச் சதம் இதுவாகும்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 33.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பெங்களூர் சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓர் அணி பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
ஜொனி பெயாஸ்டோவ், டாவிட் மலான் ஆகிய இருவரும் இலங்கையின் ஆரம்ப வேகப்பந்துவீச்சாளர்களான டில்ஷான் மதுஷன்க, கசுன் ராஜித்த ஆகிய இருவரையும் இலகுவாக எதிர்கொண்டு வேகமாக ஓட்டங்களைக் குவித்து ஆரம்ப விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஆனால், 7ஆவது ஓவரில் பந்து வீச அழைக்கப்பட்ட அனுபவசாலியான ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 3ஆவது பந்தில் டாவிட் மாலனை ஆட்டமிழக்கச் செய்து போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.
டாவிட் மலான் 28 ஓட்டங்களைப் பெற்றார்.
அதன் பின்னர் இங்கிலாந்தின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
ஜோ ரூட் 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மெத்யூஸ் – மெண்டிஸ் ஜோடியினரால் ரன் அவுட் ஆக்கப்பட்டார்
அணித் தலைவர் ஜொஸ் பட்லர் 8 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது லஹிரு குமாரவினால் ஆட்டம் இழக்கச்செய்யப்பட்டார்.
மறு பக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்ளைப் பெற்ற ஜொனி பெயாஸ்டோவை கசுன் ராஜித்த வெளியேற்றினார்.
அவரைத் தொடர்ந்து லஹிர குமாரவின் பந்துவீச்சில் லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆட்டம் இழந்தார்.
இந் நிலையில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அணியை வீழச்சியிலிருந்து மீட்க முயற்சித்தனர்.
அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மொயீன் அலியின் விக்கெட்டை மெத்யூஸ் கைப்பற்றி ஆட்டத்தில் இரண்டாவது தடவையாக திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
மொயின் அலி 15 ஓட்டங்களைப் பெற்றார்.
அடுத்து களம் புகுந்த கிறிஸ் வோக்ஸ் கொடுத்த தாழ்வான பிடியை வலப்புறமாகத் தாவி சமீர சமரவிக்ரம பிடித்தார்.
ஆனால், அந்தப் பிடி நேர்த்தியாக எடுக்கப்படவில்லை என்ற சந்தேகத்தில் 3ஆவது மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
நீண்டநேரம் சலன அசைவுகளைப் ஆராய்ந்த 3ஆவது மத்தியஸ்தர், கிறிஸ் வோக்ஸ் ஆட்டம் இழந்ததாக அறிவிக்க வோக்ஸ் நம்பமுடியாதவராக அதிருப்தியுடன் களம் விட்டகன்றார்.
இதேவேளை பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சாளர்களை சிதறடிக்கும் வகையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. அவர் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து ஆதில் ராஷித் (2) ரன் அவுட் ஆனதுடன் மார்க் வூட் 5 ஓட்டங்களுடன் தீக்ஷனவினால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டார்.
டேவிட் வில்லி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் லஹிரு குமார 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.