தமிழ்நாட்டில் கிரிவலம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்களுக்கு கிடைக்கின்றன என்பது பக்தர்களின் அபார நம்பிக்கை.
திருவண்ணாமலை அருணாச்சல மலை என்றும் அழைக்கப்படுகிறது. அருணாச்சல மலை 2668 அடி உயரமும் 14 கிலோமீட்டர் சுற்றளவும் கொண்டது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவை,
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவையே அந்த எட்டு லிங்கங்கள் ஆகும்.
ஆதிப் பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி வலம் வரும்போது மலையை சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக் கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.