திருப்பதி கோவிலில் நடந்த ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
புஷ்ப பல்லக்கு 6 வகையான பாரம்பரிய மலர்கள், 6 வகையான கொய் மலர்கள் (கட் பிளவர்கள்) என ஒரு டன் மலர்களால் ஹம்ச உருவத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். புஷ்ப பல்லக்கின் முன்பக்கம் ராமர், கிருஷ்ணர் உருவமும், மைய பகுதியில் சென்னகிருஷ்ணா, பின் பக்கம் பாலஆஞ்சநேயர் ஆகியோர் பொருத்தப்பட்டனர். புஷ்ப பல்லக்ைக 15 அலங்கார வடிவமைப்பாளர்கள் 3 நாட்களாக உருவாக்கினர்.
புஷ்ப பல்லக்கு வீதிஉலாவை தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, உதவி அதிகாரி ரமேஷ்பாபு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாஸ், சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் சுனில், பேஷ்கர் ஸ்ரீஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.