திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி கோதண்டராமர், சீதா, லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உள்ளே வலம் வந்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானம் நடந்தது. ஆனி மாதத்தில் கடைசி வாரம் நடப்பதால் ஆனிவார ஆஸ்தானம் எனப்படுகிறது. கோவிலில் மூலவரிடம் வருவாய், செலவு, இருப்பு மற்றும் வருடாந்திர கணக்குகள் படித்து காண்பிக்கப்பட்டு, வரும் ஆண்டுக்கான வரவு, செலவு கணக்கு தொடங்கப்பட்டது. உற்சவர் புண்டரீகவள்ளி தாயார் கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்தார்.
அப்போது மூலவர் கோவிந்தராஜசாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெரிய ஜீயர்சுவாமிகள், சின்னஜீயா்சுவாமிகள், கோவில் உதவி அதிகாரி ரவிக்குமார்ரெட்டி, கண்காணிப்பாளர் வெங்கடாத்ரி, கோவில் ஆய்வாளர் முனீந்திரபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஆனி வார ஆஸ்தானம் நடந்தது. அதையொட்டி கோதண்டராமர், சீதா, லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உள்ளே வலம் வந்தனர். நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.