திருப்பதி ஏழுமலையானுக்கு பல்வேறு கைங்கர்யம் செய்தவர் தறிகொண்டா வெங்கமாம்பா. அவர், திருமலைக்கு வந்து முதல் முதலில் பக்தர்களுக்கு அன்னதானத் திட்டத்தை தொடங்கி நடத்தியவர். அவர், திருமலையில் வடக்கு மாடவீதியில் வீடு கட்டி வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவரின் வீடு கல் மண்டபமாக அழைக்கப்படுகிறது. அவரை போற்றும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் தறிகொண்டா ெவங்கமாம்பா ஜெயந்தி விழா, நினைவுநாள் ஆகியவற்றை கடைப்பிடித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தறிகொண்டா வெங்கமாம்பாவின் ஜெயந்தி விழா திருமலையில் 5 நாட்கள் நடந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று மாலை ஏழுமலையான் கோவிலில் சஹஸ்ர தீப அலங்கார சேவை முடிந்ததும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தனர்.