வங்கியை கொள்ளை அடித்தேனா? பாகிஸ்தான் ரகசியத்தை இந்தியாவுக்கு வெளிப்படுத்தினேனா? திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதில் என்ன தவறு? என இம்ரான் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்(64). இவர் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை இம்ரான் கான் திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமான 9 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8-ந்தேதி டி.வி.தொகுப்பாளர் ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார்.
அதை தொடர்ந்து தனிமையில் இருந்த இம்ரான்கான் 3-வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு தினத்தன்று புஷ்ரா மனேகா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்ததாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இம்ரான்கானின் 3-வது திருமணத்தை பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் முப்தி சயீத் என்பவர் நடத்தி வைத்தார். இவர்களது திருமணம் லாகூரில் ஜனவரி 1-ந்தேதி இரவு நடைபெற்றது.
மணப்பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவரது முதல் கணவர் ஒரு அரசு ஊழியர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆன்மிக நிம்மதிக்காக புஷ்ரா மனேகாவை இம்ரான் கான் சந்தித்துள்ளார். கணவரை பிரிந்து வாழும் அவர் மீது இம்ரான் கானுக்கு இருந்த ஈடுபாடு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக இம்ரான் கான் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பாகிஸ்தானில் நவாஸ் ஷரிப் கட்சிக்கு ஆதரவான சில ஊடகங்கள் இம்ரான் கானின் மூன்றாம் திருமணம் தொடர்பான யூக செய்திகளை ஊதிப் பெரிதாக்கி வருகின்றன.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்த இம்ரான் கான், தற்போது பொங்கி எழுந்து நவாஸ் ஷரிப் மற்றும் அவருக்கு ஆதரவான ஜியோ டி.வி. உள்ளிட்ட ஊடகங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
‘நவாஸ் ஷரிப் மற்றும் அவரது குடும்பத்தாரின் அசிங்கமான அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி எனக்கு கடந்த 40 ஆண்டுகாலமாக தெரியும். இருந்தாலும், அவர்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து அந்த விபரங்களை வெளியிட மாட்டேன்.
நான் என்ன வங்கியை கொள்ளை அடித்தேனா? நாட்டுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பணத்தை வெளிநாட்டுக்கு கடத்தி சென்றேனா? கூலிக்கு கொலை செய்யும் கும்பலை ஏவி விட்டேனா? அல்லது, நாட்டின் ரகசியத்தை இந்தியாவுக்கு தெரிவித்தேனா?
இவற்றில் எதையுமே நான் செய்யவில்லை. ஆனால், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய மிகப்பெரிய குற்றத்தை நான் செய்துள்ளதை கடந்த மூன்று நாட்களாக எனக்கு எதிராக நடத்தப்படும் விஷமத்தனமான பிரசாரங்களில் மூலம் அறிந்து கொண்டேன்.
கடந்த சில ஆண்டுகளாக நான் இழந்திருக்கும் நிம்மதி எனக்கு திரும்பி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்குமாறு எனது நலவிரும்பிகள் மற்றும் தொண்டர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.