கடந்த 2 மாதங்களாக இணையதளத்தில் வெளியிடப்படும் டிக்கெட்டுகளின் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இதனால் பக்தர்களால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலவில்லை.
திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் 20-ந்தேதிக்கு மேல் அடுத்த மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
செப்டம்பர் மாதத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டது. ரூ.300 கட்டணத்தில் 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 10 நிமிடத்தில் செப்டம்பர் மாத 30 நாட்களுக்கான 2.40 லட்சம் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு முடிந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் கிடைக்காமல் அவதியடைந்தனர்.
கடந்த 2 மாதங்களாக இணையதளத்தில் வெளியிடப்படும் டிக்கெட்டுகளின் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இதனால் பக்தர்களால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலவில்லை.
மேலும் டிக்கெட் வெளியிடப்படும் சமயத்தில் தேவஸ்தானத்தின் இணையதள சேவை முற்றிலும் முடங்கி விடுகின்றன. இதனால் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதுகுறித்து பலமுறை தேவஸ்தானத்துக்கு புகார் அளித்தாலும் அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை. தேவஸ்தான இணையதளம் ஹாக்கர்ஸ்சால் ஹாக் செய்யப்பட்டதால் பக்தர்களால் இவற்றை முன்போல் எளிதாக முன்பதிவு செய்ய இயலவில்லை என பக்தர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் ஏழுமலையான் தரிசனம் பக்தர்களுக்கு கிடைப்பது அரிதாகிவிடும்.
கடந்த 2 மாதங்களாக 5,000 முதல் 8,000 டிக்கெட்டுகள் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் தினசரி அதிகபட்சம் 20 ஆயிரம் முதல் 23 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை சற்று முரணாக உள்ளது.
விரைவு தரிசன டிக்கெட்டுகளை காட்டிலும் விமானம், ரெயில் மற்றும் பஸ் மூலம் நடத்தப்பட்டு வரும் சுற்றுலாத் துறைக்கு திவ்ய தரிசனம் என்ற பெயரில் அளிக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு தேவஸ்தானம் முன்னுரிமை அளித்து வருவதால் விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாகவும் பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.
அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் இலவச தரிசனம் தொடங்க வேண்டும் என்றும், அல்லது ரூ.300 முன்பதிவு தரிசன டிக்கெட்டுகளையாவது கூடுதலாக வெளியிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.