திருப்பதியில் ஆனி மாத ஆஸ்தானம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி மூலிகைகளால் கோவிலை சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி, ஆனிமாத ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி விழாக்களின்போது கோவிலை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியான ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அதன்படி ஆனி மாத ஆஸ்தானம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி மூலிகைகளால் கோவிலை சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து உற்சவர் சிலைகளும் தற்காலிகமாக தண்ணீர் புகா வண்ணம் மூடப்பட்டது. பின்னர் ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப பொடி, குங்குமப்பூ போன்ற மூலிகை பொருட்களுடன், புனித வாசனை திரவிய நீர் கொடிமரம், மேற்கூரை, சன்னதிகள் உள்பட, கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நடைபெற வசதியாக அனைத்து பூஜைகளும் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்த நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்தபின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.