திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயிலில் மூன்று தங்கக் கிரீடங்கள் காணாமல் போயுள்ளன.
திருப்பதி மலை அடிவாரத்தில் கோவிந்தராஜ சாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமானது. இந்தக் கோயிலில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகளை அலங்கரிக்க 1,300 கிராம் எடைகொண்ட மூன்று தங்கக் கிரீடங்களைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. இந்தக் கிரீடங்கள் நேற்று (பிப்ரவரி 2) மாலை முதல் காணவில்லை. கோயில் அர்ச்சகர்கள் சிலர் தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு தங்கக் கிரீடங்கள் காணாமல் போனது குறித்துத் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி பாஸ்கர், கண்காணிப்புத் துறை அதிகாரி கோபிநாத் ஜெட்டி மற்றும் சில கண்காணிப்புத் துறை அதிகாரிகளுடன் நேற்று இரவு விசாரணையைத் தொடங்கினர். திருப்பதி காவல் கண்காணிப்பாளர் அன்பு ராஜன் மற்றும் குற்றத்தடுப்பு காவல் அதிகாரிகளும் கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். காவல் துறை அதிகாரிகள் 6 தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நேற்று காலை முதல் பணியில் இருந்த அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. காணாமல் போன நகைகள் திருடப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் அன்பு ராஜன் தெரிவித்துள்ளார். இதேபோல கடந்த 2008ஆம் ஆண்டில் திருப்பதியில் இருக்கும் கோதண்ட ராமசாமி கோயிலில் அர்ச்சகர் வெங்கட்ரமண தீட்சிதலு என்பவர் 300 கிராம் நகையை திருடிச் சென்று 10 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்ததும், அதைக் கண்டுபிடித்து, காவல் துறை அவரைக் கைது செய்து நகையை மீட்டதும் குறிப்பிடத்தக்கது.