திருமலையில் உள்ள ஆகாசகங்கையில் அமைந்திருக்கும் குகையில் தான் ஆஞ்சநேயர் அவதரித்தார் என பல்வேறு புராணங்களின் அடிப்படையில் தேவஸ்தானம் அமைத்த ஆஞ்சநேயரின் பிறப்பிடம் தொடர்பான ஆய்வுக் குழுவினர் உறுதிபட கூறியுள்ளனர்.
12 புராணங்களில் ஆஞ்சநேயர் திருமலையில் அவதரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த இடத்தின் பெயரையும் ஆஞ்சநேயர் அவதரித்த இடம் என்று புராணங்களில் கூறப்பட வில்லை. எனவே ஆஞ்சநேயரின் அவதார திருத்தலம் பற்றிய கருத்து வேறுபாடுகளுக்கு இடமே கிடையாது.
இந்த நிலையில் தேவஸ்தான பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இன்று வெள்ளக்கிழமை ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மலையில் ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு இன்று தொடங்கி வரும் 8ந் தேதி வரை ஆஞ்சநேயரின் அவதார திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று ஆஞ்சநேயர் அவதரித்த குகையில் பால ஆஞ்சநேயர், ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா தேவி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.அதேபோல் ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் பேடி ஆஞ்சநேயர், திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வழியில் இருக்கும் 7வது மைல் ஆஞ்சநேயர் ஆகிய ஆஞ்சநேயர்களுக்கும் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருக்கும் நாத நீராஞ்சனம் மண்டபத்தில் வரும் 5 நாட்களும் ஆஞ்சநேயர் தொடர்பான பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.