திருச்சியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்: 157 பேர் உயிர் தப்பினர்!
திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு திருச்சி வந்து, பயணிகளை இறக்கி ஏற்றிக்கொண்டு, மாலை 5.30-க்கு மலேசியா புறப்பட்டது ஏர் ஏசியா விமானம்.
விமானத்தில் 151 பயணிகளும், 6 சிப்பந்திகளும் இருந்தனர்.
சுமார் 1 மணிநேர பயணத்துக்குப் பின்னர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து, திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனால் விமானத்தை மீண்டும் திருச்சியில் தரை இறக்குமாறு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானியை அறிவுறுத்தினர்.
இதையடுத்து விமானம் மீண்டும் திருச்சி திரும்பியது. திருச்சியில் அவசரமாக தரையிறக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக, விமானத்தில் உள்ள எரிபொருளை தீர்க்கும் வகையில் வட்டமடிக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து விமானம் திருச்சி எல்லையிலேயே தாழ்வாக பறந்து வட்டமடித்தது.
இதற்குள் தீயணைப்பு வாகனங்கள், அம்புலன்ஸுகள், மருத்துவக் குழுவினர், பாதுகாப்பு படை வீரர்கள் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர்.
பின்னர் எரிபொருள் தீர்ந்து இரவு 7.25- மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. எந்தவிதமான அசம்பாதவிதமும் இன்றி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார் விமானி.
சுமார் 1 மணிநேர திக் திக் பயணத்துக்கு பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியதை அடுத்து பயணிகள் விமானிக்கு நன்றி தெரிவித்தனர்.
பயணிகள் அனைவரும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதும் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவர். அல்லது இரவு விமானத்தில் அனுப்பிவைக்கப்படுவர் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு இதேபோல் மலேசிய விமானம் புறப்பட்ட சில சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.