மஹா சிவராத்திரி பெருவிழாவினை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநரின் அழைப்பின் பெயரில், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகம் திணைக்களம் மற்றும் ஆலய பரிபாலன சபை இணைந்து இவ்வாண்டு மஹா சிவராத்திரி பெருவிழாவினை திருக்கோணேஸ்வர பெருமானின் அருளாசிகளுடன் வெகுவிமர்சையாக நடத்தவுள்ளன.
இப்பெருவிழா தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினருடனான சந்திப்பு ஒன்றினை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் (02) முன்னெடுத்தனர்.
அந்த வகையில், மஹா சிவராத்திரிக்கு முந்தைய ஐந்து தினங்கள், அதாவது நாளை 03ஆம் திகதி தொடக்கம் 07ஆம் திகதி வரை திருக்கோணேஸ்வரப் பெருமானின் ஆலய வளாகத்தில் மாலை நேரங்களில் இந்தியாவிலிருந்தும் இலங்கையில் இருந்தும் ஆதீன சமயப் பெரியார்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் மற்றும் கர்நாடக இசை வல்லுநர்கள் வருகை தந்து எம்பெருமானின் மஹா சிவராத்திரி நிகழ்வினை வெகு விமர்சையாக சிறப்பிக்கவுள்ளனர்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இன்றைய சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.