உலகக் கிண்ண சுப்பர் லீக் போட்டித் தொடருக்கு அமைவாக நடத்தப்பட்ட நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே இடம்பெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரு ஓட்டத்தால் இறுக்கமான வெற்றியை நெதர்லாந்து அணி பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ண சுப்பர் லீக் போட்டித் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இலங்கை அணியை நெதர்லாந்து அணி முந்தியதுடன் இலங்கை அணி தற்போது கடைசி இடமான 13 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண சுப்பர் லீக் போட்டித் தொடரில் 13 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இலங்கை அணி பங்கேற்ற 6 போட்களில் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றியீட்டி 8 புள்ளிகளுடன் (தண்டனைப் புள்ளி 2 குறைக்கப்பட்டதால் முழுமையான 10 புள்ளிகள் கிடைக்கப்பெறவில்லை) 12 ஆவது இடத்தில் இருந்தது.
இந்நிலையில், கடைசி இடமான 13 ஆவது இடத்திலிருந்த நெதர்லாந்து அணி அயர்லாந்து அணியுடனான வெற்றியை அடுத்து ஈட்டிக்கொண்ட 10 புள்ளிகளைப் பெற்று 12 ஆவது இடத்தை பிடித்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் அயர்லாந்து அணியை 14 ஆண்டுகளுக்குப் பின்னர் நெதர்லாந்து அணி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.