தினகரன் தலையீடு இல்லாமல் அதிமுக ஆட்சி நடைபெறும் என முகத்தில் அறைவது போன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ், சசிகலா அணி என அதிமுக பிரிந்துள்ள நிலையில் தற்போது எடப்பாடி அணி, தினகரன் அணி என மேலும் சில்லாக சிதறியுள்ளது அதிமுக.
இதனிடையே திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன், கட்சியை விட்டு தன்னை யாரும் நீக்க முடியாது என்றும் தான் கட்சிப்பணியில் நீடிப்பதாகவும் கூறி பரபரப்பை கூட்டினார்.
கட்சி, ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்ற தினகரன் நினைப்பதை அறிந்த எடப்பாடி அணியினர் ஒன்றிணைந்து இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சசிகலாவை சந்திக்கும் பொருட்டு தினகரன் காலையில் பெங்களூரு கிளம்பி சென்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசித்துள்ளனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், ஏப்ரல் 17ஆம் திகதி நாங்கள் என்ன முடிவு எடுத்தோமோ அதில் உறுதியாக இருக்கிறோம்.
யாருடைய தயவும் இன்றி ஜெயலலிதா ஆசியுடன் அவருடைய வழிகாட்டுதலுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது என முகத்தில் அறைந்தது போன்று கூறியுள்ளார்.
ஆக கட்சியிலும், ஆட்சியிலும் இடமில்லை என்று டிடிவி தினகரனுக்கு கதவை சாத்திவிட்டனர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர். இதனால் அதிமுக மேலும் பல அணிகளாக சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.