2017-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திருநெல்வேலியில் நடைபெற்ற 7 வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணியும் மோதின. குறைந்த ரன்களே எடுக்கப்பட்டாலும் பரபரப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருவள்ளூர் வீரன்ஸ் அணி. நான்கு விக்கெட் வீழ்த்திய திருவள்ளூர் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ராஹில் ஸா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய திண்டுக்கல் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான். அபிஷேக் தன்வர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார் திண்டுக்கல் தொடக்க வீரர் சுப்ரமணிய சிவா. சிவாவின் பேட்டில் பட்டு அவுட்சைடு எட்ஜான பந்து நேராக சித்தார்த்தின் கைகளில் தஞ்சம் புக, தடுமாறினாலும் சமாளித்து கேட்ச் செய்தார் சித்தார்த். பிறகு, கங்கா ராஜூ உடன் ஜோடி சேர்ந்தார் விக்கெட் கீப்பர் ஜெகதீசன். இருவரும் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர். பல பந்துகளை வேஸ்ட் செய்த கங்கா ராஜூ, ஒருவழியாகத் தனது இயல்பான ஆட்டத்தைக் கையிலெடுத்தார். திருவள்ளூர் அணி பவுலர்கள் துல்லியமாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தியதுடன் ஸ்டிரைக் ரொட்டேசன் ஆகாமல் பார்த்துக்கொண்டனர். ஃபீல்டிங்கிலும் திருவள்ளூர் அணி பட்டையக் கிளப்ப திண்டுக்கல் அணி திணறியது. 5 ஓவர்களுக்கு 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஹில் ஸாவின் நேர்த்தியான பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் விக்கெட்டை இழந்து ஜெகதீசன் வெளியேறினார்.
ஸ்பின்னர் முருகன் அஸ்வின் டக் அவுட்டாகி வெளியேற ஏழு ஓவர்களில் 35 ரன்களுடன் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது திண்டுக்கல் அணி. அடுத்தடுத்த ஓவர்களில் கங்கா ராஜூ மற்றும் வில்கின்ஸ் விக்டர் ரன் அவுட்டாகி வெளியேறினர். திருவள்ளூர் அணி தனது சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கின் மூலம் திண்டுக்கல் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தியது. 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்த நிலையில், ஏழாவது விக்கெட்டுக்கு இறங்கிய கிசான் குமார் சஞ்சய் யாதவின் பந்து வீச்சில் கிளீன் போல்டானார். இடையில் திருவள்ளூர் அணிக்கு கிடைத்த கேட்ச் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகள் மிஸ்ஆக, திண்டுக்கல் அணி விவேக்கின் உதவியுடன் 80 ரன்களை எட்டியது. மேற்கொண்டு மூன்று ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த திண்டுக்கல் அணி 17.5 ஓவர்களின் முடிவில் 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் அணியில் ஒருவர்கூட 20 ரன்களைத் தாண்டவில்லை. அதிக பட்சமாக கேப்டன் வெங்கடராமன் 19 ரன்களும் கங்கா ராஜூ 17 ரன்களும் எடுத்தனர். திருவள்ளூர் அணி சார்பில் அதிகபட்சமாக ராஹில் ஸா 4 விக்கெட்டுகளும் சிலம்பரசன் 2 விகெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து 84 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய திருவள்ளூர் அணியும் தொடக்கத்தில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் சதுர்வேத் 3 வது ஓவரில் நடராஜனின் பந்தில் சஞ்சயிடம் கேட்ச் ஆனார். சன்னி சிங்கின் 4 வது ஓவரில் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி விரட்டிய சித்தார்த் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். திருவள்ளூர் அணி 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. மீண்டும் பந்துவீச வந்த நடராஜன் இம்முறை தன் முதல் பந்திலேயே நிஸாந்த்தை போல்டாக்கி வெளியேற்றினார். 4 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் பாபா அபராஜித் மற்றும் சித்தார்த் ஜோடி சீரான ஆட்டத்தை நிதானமாக வெளிப்படுத்த திருவள்ளூர் அணி வெற்றியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. 7 ஓவர்களின் முடிவில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எட்டாவது ஓவரை வீச வந்த முருகன் அஸ்வின் கால் இடறி விழுந்து காயத்தால் வெளியேற, அவருக்குப் பதிலாக பந்துவீச வந்தார் வில்கின்ஸ் விக்டர். எட்டாவது ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸராக மாற்றிய சித்தார்த் அடுத்த பந்திலேயே திண்டுக்கல் அணியின் விக்கெட் கீப்பர் ஜெகதீசனால் ஸ்டம்பிட் செய்யப்பட்டு வெளியேறினார்.
மறுபுறம் போராடிய கேப்டன் அபராஜித், கிசான் குமாரின் பத்தாவது ஓவரில் ஒரு சிக்ஸர் விளாசினார். 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்த திருவள்ளூர் அணி, திடீரென திண்டுக்கல் அணியின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கால் தடுமாறியது.
11 வது ஓவரை வீசிய சஞ்சய் ஒரே ஓவரில் முறையே மலோலன் ரங்கராஜன் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரை வெளியேற்றி செக் வைத்தார். இருந்தாலும், மனம் தளராமல் போராடிய கேப்டன் அபராஜித் மற்றும் ராஜன் ஜோடி நேர்த்தியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது.15 வது ஓவரில் சிக்ஸ் அடித்து அபராஜித் வெற்றியை உறுதிசெய்ய, வெற்றிக்கான சிங்கிளை துரிதமாக எடுத்தார் ராஜன். முடிவில் 14.5 ஒவர்களில் 84 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது திருவள்ளூர் அணி. அந்த அணியில் அதிகபட்சமாக சித்தார்த் 37 ரன்களும் கேப்டன் அபராஜித் 28 ரன்களும் எடுத்தனர். திண்டுக்கல் அணி சார்பில் நடராஜன் மற்றும் சஞ்சய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
போட்டி முடிந்தபின் பேசிய திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர் சுப்ரமணிய சிவா, ‛‛130 முதல் 145 ரன்கள் வரை எடுத்திருந்தால் எங்கள் அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டு இந்த ஆட்டத்தைச் சமாளித்திருக்கலாம். முருகன் அஸ்வினின் காயம் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. நாங்கள் எடுத்தது மிகக் குறைந்த ரன்கள்தான் என்றாலும், நாங்கள் வெற்றிக்காக உறுதியாகப் போராடினோம்’’ என்றார்.