தொடரை வெல்லும் முனைப்புடன் புனேயில் டாஸ் வென்று பேட் செய்த நியூஸிலாந்து அணியை இந்திய அணி அபாரப் பந்து வீச்சின் மூலம் 230 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது. நியூஸிலாந்து 50 ஓவர்களில் 230/9!
புவனேஷ் குமார் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளையும், பும்ரா, சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற அக்சர் படேலோ மொத்த ரன் விகிதம் 4.60 என்ற நிலையில் ஓவருக்கு 5.4 என்ற ரீதியில் ரன்களைக் கொடுத்து 54 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார், ஆனால் அது முக்கியமான டாம் லேதம் விக்கெட்டாகும். ஜாதவ் அருமையாக வீசி 8 ஓவர்களில் 31 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.
நியூஸிலாந்து அணியில் எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸை ஆடி சுவாரசியமூட்டியவர் கிராண்ட்ஹோம் ஆவார், இவர் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்தார், அதிகபட்ச ஸ்கோரை எடுத்த நிகோல்ஸ் 42 ரன்களுக்கு 62 பந்துகளை எதிர்கொண்டார்.
புவனேஷ் குமாரும் பும்ராவும் புதிய பந்தில் பவுன்சர்கள், இன்ஸ்விங்கர்கள், வேகம் குறைந்த பந்துகள் என்று வீசி இருவரும் சேர்ந்து 20 ஓவர்களில் 83 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். தொடக்க ஸ்பெல்லில் நியூசிலாந்து கப்தில், மன்ரோ, கேன் வில்லியம்சன் விக்கெட்டுகளை சடுதியில் இழந்து 27/3 என்று தடுமாறியது.
முதல் போட்டியில் ஸ்வீப் ஷாட்டில் காலி செய்து பேட்டியெல்லாம் கொடுத்த லேதம் இம்முறை 62 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார், ஆனால் இவரைப் பெரும்பாலும் அமைதியாக வைத்திருந்தவர் கேதார் ஜாதவ், இவருக்கு போன மேட்சில் பவுலிங்கே கொடுக்கவில்லை, ஆனால் இன்று 7 ஓவர்கள் தொடர்ச்சியாக வீசி 24 ரன்களையே கொடுத்திருந்தார், இவரது ஆக்சன் மற்றும் பந்தின் தாழ்வான போக்குகளினால் ஸ்வீப் ஷாட் கடினமானது. ஒன்று ஸ்டம்பில் வீசினார் இல்லையெனில் வைடாக வீசினார் இதனால் ஸ்வீப் ஷாட் தடைபட்டுப்போனது. கடைசியில் அக்சர் படேலின் நேர் நேர் பந்து வீச்சை புரிந்து கொள்ளாமல் ஸ்வீப் ஆடி பவுல்டு ஆனார் லேதம். இந்தப் பந்தை ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீசினார் அக்சர்.
முன்னதாக ராஸ் டெய்லரை துல்லியமான பவுன்சரில் பாண்டியா வீழ்த்தினார், ஹூக் ஷாட் தோனியின் கையில் தஞ்சமடைந்தது. இடையில் 22 ஓவர்களில் நியூஸிலாந்து 92 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
கொலின் டி கிராண்ட்ஹோம் இறங்கி நியூஸிலாந்து இன்னிங்ஸிற்கு புத்துணர்ச்சி அளித்தார். பிளிக்குகள், ஆன் டிரைவ்களை பிரமாதமாக ஆடி நிகோல்ஸுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 47 ரன்களை கொஞ்சம் விரைவில் சேர்த்தார். நிகோல்ஸை அருமையான இன்ஸ்விங்கரில் லெக் ஸ்டம்பை சாய்த்தார் புவனேஷ் குமார்.
2வது பவர் பிளேயில் புவனேஷ், பும்ரா 4 ஓவர்களில் 12 ரன்களையே கொடுக்க கிராண்ட்ஹோம் நெருக்கடியில் சாஹலை பெரிய ஷாட்டுக்குச் சென்று ஷார்ட் தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், அடுத்த பந்து நேராக சறுக்கிக் கொண்டு வர ஆடம் மில்ன எல்.பி.ஆனார்.
188/8 என்று தடுமாறிய நியூஸிலாந்து அணிக்கு மிட்செல் சாண்ட்னர் (29 ரன்கள் 2 பவுண்டரி 1 சிக்ஸ்), டிம் சவுதி (25) ஆகியோர் 230 ரன்களை உறுதி செய்தனர்.