இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திசர பெரேரா அங்கம் வகிக்கும் பாபர் அசாம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 12 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி கடந்த வியாழன்று இரவு நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்கைளப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ரில்லி ரூஸோ 24 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை அதிரடியாக குவித்தார்.அவரைத் தவிர, குஷ்தில் ஷா 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள் , 3 பெளண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களையும், ஷொயிப் மக்சூத் 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள் , ஒரு பெளண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்களையும் விளாசியிருந்தனர்.
பந்துவீச்சில் திசர பெரேரா 3 ஓவர்கள் பந்து வீச்சில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது பந்துவீச்சு ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை அனைவரையும் வியக்கவைத்தது.
177 ஓட்டங்கைள வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியின் கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவையென்ற நிலையில் களமிறங்கிய திசர பெரேரா ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்ததுடன், பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 84 ஓட்டங்களும் வீணானது. போட்டியின் நாயகனாக ரில்லி ரூஸோ தெரிவானார்.
இதேவேளை , லாஹூர் குலாண்டர்ஸ் அணிக்கும் பெஷாவர் ஸல்மி அணிக்கும் இடையில் நேற்றைய தினம் நடைபெற்ற தொடரின் 17 ஆவது போட்டியில் லாஹூர் குலாண்டர்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றியை ஈட்டியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லாஹூர் குலாண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பெஷாவர் ஸல்மி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கைள பெற்று 10 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.