நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நாளை நீக்கப்பட்டாலும் , நாளையிலிருந்து நாளாந்தம் இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரையான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை , வைத்தியசாலை மற்றும் தொழில் நிமித்தம் செல்பவர்களைத் தவிர ஏனையவர்கள், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கேற்பவே செல்லமுடியும். அதற்கு புறம்பாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியின் முழுமையான போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த கட்டுப்பாடு நாளை திங்கட்கிழமை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. எனினும் இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரையான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலிலிருக்கும்.
அத்தோடு நாளை போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டிருந்தாலும் , அத்தியாவசிய சேவை , வைத்தியசாலைக்கு செல்பவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களுக்கு மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்படுவதுடன், அது தொடர்பில் அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பொலிஸாருக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
ஏனையவர்கள் அருகில் இருக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்கு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய மாத்திரமே செல்ல முடியும்.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தொடர்ந்தும் முடக்கம்
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மாகாணத்திற்குள் வழமையைப் போன்று போக்குவரத்து இடம்பெறும்.
இதன்போது பஸ்களில் இருக்கையின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் பயணிக்க முடியும். ஏனைய வாகனங்களிலும் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் பயணிக்க முடியும். இரவு 11 மணிக்கு பின்னர் எந்தவொரு வாகனமும் பயணிக்க இடமளிக்கப்பட மாட்டாது.
தொழிலுக்கு செல்வோர்
அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரம் , நீர் , மின்சாரம் , தொடர்பாடல் , ஊடகம் , துறைமுகம் , விமான நிலையம், தனியார் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிபவர்கள் , பணிக்குச் செல்ல முடியும். அதனை உறுதிப்படுத்துவதற்காக தொழில் அடையாள அட்டை அல்லது ஆவணம் அவர்கள் வசமிருக்க வேண்டும்.
ஏனையவை
பல்பொருள் அங்காடிகள் , சேவை நிலையங்கள் மற்றும் சிகை அழங்கார நிலையங்களில் 25 சதவீதமானவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்க வேண்டும். சந்தைகள் , வர்த்தக நிலையங்கள் , நிதி நிலைகங்களிலும் இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். விவசாய நடவடிக்கைகளை வழமையைப்போன்று முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதன் போதும் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.
நீதி மன்ற செயற்பாடுகளை சுகாதார சட்டவிதிக்கமைய முன்னெடுக்க முடியும். பாடசாலைகள் , மேலதிக வகுப்புகள் , சிறுவர் பூங்காக்கள், நீச்சல் தடாகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் , கட்டுமான பணிகள் வழமைப்போன்று சுகாதார சட்டவிதிகளுக்கமைய செயற்பட முடியும்.
மதுபான விற்பனை நிலையங்களை முற்பகல் 10 மணிமுதல் மாலை 6 மணிவரை திறக்கவும் , களியாட்ட நிலையங்கள் , திரையரங்குகள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
விருந்துபசாரங்கள் , சுற்றுலா என்பவற்றுக்கு அனுமதி இல்லை. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் , தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்படும் வரை வீடுகளிலேயே இருக்க வேண்டும். மாகாண எல்லைகள் மற்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சோதனைச்சாவடிகள் , நடமாடும் சுற்றிவளைப்பு பிரிவு, மோட்டார் சைக்கிள் சுற்றிவளைப்பு பிரிவு என்பன கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன்போது பொலிஸாருடன் முப்படையினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவர்.
மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் போலி செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சமூகவலைத்தலங்களில் வெளியிடப்படும் இவ்வாறான செயற்திகளை நம்பி மக்கள் அச்சமடைய தேவையில்லை. நாட்டில் உத்தியோகப் பூர்வமாக இயங்கிவரும் பல ஊடகநிறுவனங்கள் உள்ளன. அவற்றிலும் இணைத்தள பிரிவுகள் உள்ளது. அந்த இணையத்தளங்களில் பிரவேசித்து உண்மை செய்திகளை தெரிந்து கொள்ள முடியும் . இவ்வாறு போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த 23 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.