தாய்லாந்தில் நேற்றும், இன்றும் 5 வெடிப்புச் சம்பவங்கள்: தீவிரவாதிகளின் சதியா?
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கின் தென் பகுதியில் அமைந்துள்ள ஹாவ் ஹின் பகுதியில் இயங்கி வந்த ஹோட்டலில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடத்தப்பட்ட இரண்டை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தென் பாங்கொக்கின் மிகச் சிறந்த சுற்றுலா மையமாக விளங்கும் ஹாவ் ஹின் பகுதி, மன்னர் பூமிபோல் அதுல்யாதேவின் சொந்த வீடாக கருதப்படுகிறது. இதன் சிறப்பினால் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.20 மணியளவில் குறித்த ஹோட்டலின் மதுபான சாலைக்கு அருகே சுமார் 50 மீற்றர் தொலைவில் உள்ள பூச்செடிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருவேறு குண்டுகள் வெடித்தன. இதில் அப்பகுதியின் உணவக உரிமையாளரான பெண் உயிரிழந்ததோடு, மேலும் 5 வெளிநாட்டவர்கள் உட்பட 21 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும், இவர்களின் நிலை தொடர்பிலான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இதேவேளை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற ஹோட்லில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் நகர மையத்தில் அமைக்கப்பட்டிருந்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை இருவேறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை தாய்லாந்தின் ட்ரைங் மாகாணத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள சந்தையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிப்புச் சம்பவங்களுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரையில் உரிமைகோராத நிலையில் தாய்லாந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தாய்லாந்தில் சிறியரக வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற போதும், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட முதலாவது குண்டு வெடிப்புச் சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.