பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறைவு என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தை பிறந்து முதல் ஒன்றரை ஆண்டு காலம் வரை அவர்களுக்கு தாய்ப்பால் வழங்குவது தான் சிறந்த சத்துணவு என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மருத்துவ நிபுணர்களும் இதனை உறுதிப்படுத்தி வருகிறார்கள். மேலும் தாய்ப்பால் வழங்குவதால் பெண்மணிகளுக்கு ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால், அந்த தாய்மார்களுக்கு டைப்-2 நீரிழிவு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்றும், மார்பக புற்றுநோய் மற்றும் ஒவேரியன் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்கப்படுகிறது என்றும் கண்டறியப்பட்டது. மேலும் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொண்டபோது, தாய்ப்பால் வழங்காத பெண்மணிகளுடன் ஒப்பிடுகையில், தாய்ப்பால் வழங்கும் பெண்மணிகளுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் மற்றும் பக்கவாத பாதிப்பு ஏற்படுவது குறைவு என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக குழந்தை பெற்றெடுத்த பெண்மணிகள், அவர்களுடைய வாரிசுகளுக்கு தாய்ப்பால் வழங்கினால், அவர்களது ஆரோக்கியம் மேம்படும். அத்துடன் டைப் 2 நீரிழிவு, புற்றுநோய், இதய பாதிப்பு, பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள இயலும் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
ஆகவே பெண்கள் தங்களது பிள்ளைகளுக்கு குறைந்தபட்சம் தொடர்ந்து ஆறு மாதங்களாவது தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
டொக்டர் ஸ்ரீதேவி
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]