சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த பேச்சுக்களை மறுத்துள்ள கிறிஸ் கெய்ல், மீண்டும் டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் 42 வயதான கிறிஸ் கெய்ல் இந்த டி-20 உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரகாசிக்கவில்லை.
நேற்றைய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 சிக்ஸருடன் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
நடப்பு உலக கிண்ணதொடரில் அதிக வயது (42) வீரரான கிறிஸ் கெய்ல் 5 ஆட்டங்களில் விளையாடி வெறும் 45 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார்.
கெய்லின் ஆட்டத்திறன் பாதிப்பும் மேற்கிந்தியத்தீவுகள் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது ரசிகர்களை நோக்கி உற்சாகமாக துடுப்பாட்ட மட்டையை உயர்த்தி காட்டியபடி சென்றார்.
எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்த சக வீரர்கள் கைதட்டி ஊக்கப்படுத்தி கட்டித்தழுவி வரவேற்றனர்.
இதே போல் களத்தடுப்பில் ஈடுபடும்போது உற்சாகமாக வலம் வந்த கெய்ல் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் கூட சந்தோஷமாக அரட்டை அடித்தார்.
இவற்றை பார்க்கும் போது மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக கிறிஸ் கெய்ல் விளையாடிய கடைசி போட்டி போன்று தோன்றியது. வர்ணனையாளர்களும் இதுவே அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று கூறினர்.
எனினும் போட்டிக்குப் பிறகு ஐ.சி.சி. உடனான ஃபேஸ்புக் லைவ் அரட்டையில் கிறிஸ் கெய்ல், தான் ஓய்வை அறிவிக்கவில்லை என்றும் மேலும் டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாட விரும்புவதாக தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும் அது நடக்காது என்று ஏற்றுக் கொண்ட அவர், ஜமைக்காவில் உள்ள தனது சொந்த மக்கள் முன்னால் ஒரு பிரியாவிடை விளையாட்டை விரும்புவதாகவும் கூறினார்.
டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட கெய்ல் 2019 ஆம் ஆண்டுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஒதுங்கி விட்டார். டி-20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இதேவேளை மற்றொரு மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரரான டுவைன் பிராவோ நேற்றைய ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கடைசி சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த அவருக்கு சக வீரர்கள் இருபுறமும் வரிசையாக நின்று நேற்று மரியாதை செய்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]