துபாயில் தனது மனைவியும் குழந்தைகளும் தடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானிடம், எமிரேட்ஸ் விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுத்தொடருக்காக புறப்பட்ட இந்திய வீரர்கள் சிலருடன், அவர்களுடைய குடும்பத்தினரும் சென்றனர். அந்தவகையில், தவானும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துச் சென்றிருந்தார்.
இந்நிலையில், மும்பையில் இருந்து துபாய் சென்ற அவர்களிடம், துபாயில் தவானின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான ‘போர்டிங் பாஸ்’ வழங்க எமிரேட்ஸ் விமான நிலைய ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் மனைவி மற்றும் குழந்தைகளை பாதியில் விட்டுவிட்டு தவான் சக வீரர்களுடன் தென்னாபிரிக்கா சென்றார்.
பின்னர், உரிய ஆவணங்களை இந்தியாவில் இருந்து பெற்றுக் காண்பித்த பிறகு, மனைவியும் குழந்தைகளும் தென்னாபிரிக்கா பயணம் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தவான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். உரிய ஆவணங்களை இடைவழியில் கேட்காமல் மும்பையிலேயே கேட்டிருக்கலாம் எனவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிலில், தென்னாபிரிக்க சட்டப்படி குழந்தைகளுக்கான பிரத்தியேக நடைமுறைகளை கடைப்பிடிக்க அந்நாடு வலியுறுத்தியுள்ளது. அதை நாங்கள் பின்பற்றுக்கின்றோம். அதற்கிணங்கவே இந்த பிரச்சனையும் ஏற்பட்டது.
இதில் விதி மீறலோ, கடுமையோ எதுவும் இல்லை. எங்கள் தவறும் ஏதும் இல்லை. இது தொடர்பான அசௌகரியங்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றோம் எனக் கூறியுள்ளது.