கடற்றொழிலுக்குச் சென்ற இரு மீனவர்க ளைக் காணவில்லை. சக மீனவர்கள் படகுகளில் தேடுதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
தலைமன்னார் மேற்கு கிராமப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த சகோதரர்களான தோ. கிறிஸ்ரின் கூஞ்ஞ, தோ.எமல்ரன் கூஞ்ஞ இருவரும் நண்டு வலையைக் கரை சேர்ப்பதற்காக படகில் சென்றுள்ளனர். நேற்றிரவுவரை அவர்கள் கரைசேரவில்லை.
இதனால் தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த நாற்பது மீனவர்கள் பத்துப் படகுகளில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.இருவரும் பயணித்த படகு இயந்திரம் பழுதடைந்திருந்தால் யாழ்ப்பாணம் அல்லது இந்தியாவை அண்மித்துச் சென்றிருக்க வேண்டும். வட கடலிலே இவர்கள் தங்கள் தொழிலை மேற்கொண்டதால் அதற்குச் சாத்தியமுள்ளது. அதனையும் கவனத்திற் கொண்டு தேடுதல் நடத்தப்படுகிறது.
சில நாள்களாக கடும் காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்படுகிறது. அதனால் கடலில் போடப்பட்ட வலைகளுக்குச் சேதம் ஏற்படாமல் வலைத் தொகுதியை மீட்கும் நோக்கில் கடலுக்குச் சென்றிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.