தலை ஒட்டிப்பிறந்த குழந்தைகள் ஆபரேஷன் மூலம் பிரிக்கப்பட்ட பின், அவை இந்த ஆண்டு முதன் முதலாக புத்தாண்டை தனித்தனியாக கொண்டாடுகின்றனர்.
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள மிலிபடா என்ற கிராமத்தைச் சேர்ந்த புஷ்பாஞ்சலி கன்ஹர் என்ற பெண்ணுக்கு கடந்த 2015-ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தலை ஒட்டிய நிலையில் பிறந்த அந்த குழந்தைகளுக்கு ஜெகா, காலியா என்று பெற்றோர்கள் பெயர் சூட்டினார்கள்.
தலை ஒட்டிப் பிறந்ததால் அந்த குழந்தைகளை பராமரிப்பதிலும், வளர்ப்பதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் இரு குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்து எடுப்பது பற்றி பெற்றோர், டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து ஆபரேஷனுக்காக அந்த குழந்தைகளை டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) சேர்த்தனர். தலை ஒட்டிய நிலையில் பிறந்ததால் குழந்தைகளை பிரிப்பதில் உள்ள சிக்கல் குறித்து டாக்டர்கள் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, இரட்டையர்களை பிரிப்பதற்கான முதல் கட்ட ஆபரேஷன் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி நடைபெற்றது. அப்போது மூளை மற்றும் இருதயத்துக்கு இடையேயான ரத்தநாளங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டன.
தலைப்பகுதியை பிரிக்கும் இறுதி கட்ட ஆபரேஷன் அக்டோபர் 25-ந் தேதி நடைபெற்றது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 30 சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழுவினர் 21 மணி நேரம் ஆபரேஷன் செய்து இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்து எடுத்தனர்.
ஆபரேஷனுக்கு பிறகு ஜெகாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் மேற்கொண்ட தீவிர சிகிச்சையை தொடர்ந்து சிறிது நேரத்தில் இருதயம் வழக்கம் போல் துடிக்க தொடங்கியது.
ஆபரேஷன் செய்த காயம் தெரியாமல் இருக்க சமீபத்தில் இரு குழந்தைகளின் தொடையில் இருந்தும் தோல் எடுக்கப்பட்டு அவர்களுடைய தலையில் ஆபரேஷன் மூலம் பொருத்தப்பட்டது.
ஆபரேஷனுக்கு முன்பு ஜெகாவுக்கும், காலியாவுக்கும் ஒரே மூளையாக இருந்தது. ஆபரேஷனுக்கு பிறகு இருவருக்கும் தனித்தனி மூளை உள்ளது. பொதுவாக குழந்தைகளின் மூளை 700 முதல் 800 கிராம் வரை எடை இருக்கும் என்றும், ஆனால் பிரித்து எடுக்கப்பட்ட பிறகு இந்த குழந்தைகளின் மூளை 400 முதல் 500 கிராம் வரை எடை இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் விஞ்ஞான துறையின் தலைவர் டாக்டர் ஏ.கே.மஹபத்ரா தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள் ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இதுவே முதல் தடவை ஆகும்.
ஆபரேஷனுக்கு பிறகு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஜெகாவும், காலியாவும் வேகமாக குணம் அடைந்து வருகிறார்கள்.
ஒட்டிப் பிறந்த அந்த இரட்டை குழந்தைகள் இந்த ஆண்டு முதன் முதலாக புத்தாண்டை தனித்தனியாக கொண்டாடி வருகிறார்கள்.
தனது குழந்தைகள் இருவரும் விரைவில் பூரண குணம் அடைந்து சொந்த ஊருக்கு திரும்பும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பதாக தாய் புஷ்பாஞ்சலி கன்ஹர் நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளார்.