தேசவிடுதலைக் கனவுடன் ஈழ மண்ணில் விதையான எங்கள் மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற உன்னத நாளே மாவீரர் நாள் ஆகும். எம் தேசவிடுதலையின் பெருந்தாகத்தின் குறியீட்டு நாளிது.
தங்கள் இளமை துறந்து, பற்றுப் பாசங்கள் துறந்து, அனைத்தையும் தியாகம் செய்து தேச விடுதலையும் இனத்தின் சுதந்திரமும்தான் தம் வாழ்வின் பெரு இலட்சியங்கள் எனத் தலைவன் வழியில் சென்று தம்மை ஆகுதி ஆக்கியவர்கள் இம் மாவீரர்கள்.
ஈழ தேசம் இன்று மாவீரர் நாளை பெரும் எழுச்சியுடன் கொண்டாடத் தயாராகி வருகிறது. அதேபோன்று உலக நாடுகளிலும் எமது உறவுகள் மாவீரர் நாள் ஏற்பாட்டைச் செய்து வருகின்றனர்.
தாயகத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிராக நின்ற துரோகிகளுக்கும் தமிழ் தேசியப் பாதையில் நின்று எமக்கு ஆபத்து விளைவித்தவர்களுக்கும் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டியுள்ளனர்.
புலம்பெயர் தேசத்திலும் எமது தேசவிடுதலைக்கு எதிராக கடந்த காலத்தில் ஶ்ரீலங்கா அரசுக்குச் சார்பாக செயற்பட்டவர்களும் ஶ்ரீலங்கா அரசின் சூழ்ச்சியில் எடுபட்டவர்களும் இந்தப் பாடத்தையும் எச்சரிக்கையும் உணர்ந்து கெள்ள வேண்டும்.
நவம்பர் 26. எம் தேசத் தலைவனின் 70ஆவது அகவை நாள். அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்… ஈழ விடுதலைக்காக தம்மை ஆகுதி ஆக்கிய மாவீரர்களின் கனவை தலைவர் காட்டிய வழியில் சுமந்து உண்மையோடும் நேர்மையோடும் அறத்தோடும் தொடர்ந்து பயணிப்போமாக…
ஊடகப் போராளி கிருபா பிள்ளை