மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை தயாரிக்கும் விதம் தொடர்பிலான, புதிய ஒழுங்கு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று(12) தெரிவித்துள்ளார்.
முகத்தை முழுவதும் மறைக்கும் தலைக்கவசத்தை அணிய, பொலிஸார் விதித்துள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய ஒழுங்கு விதிகள் குறித்து ஆராய்ந்து தகவலளிக்க காலஅவகாசம் வழங்குமாறு, முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணி இதன்போது கோரியுள்ளார்.
இதற்கமைய, இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இதன்போது முகத்தை முழுவதும் மறைக்கும் தலைக்கவசத்தை அணிய பொலிஸார் விதித்துள்ள தடைக்கு, இடைக்கால தடை விதித்து, நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, எதிர்வரும் 8ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.