டெல்லி-லாகூர் இடையிலான பேருந்து சேவையை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் பாகிஸ்தான் தன்னிச்சையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவுடன் தூதரக, வர்த்தக உறவுகள் துண்டிப்பு, வாகா எல்லை மூடல் , வான் பரப்பு மூடல் போன்ற நடவடிக்கைளை அடுத்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலையும் தார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பாகிஸ்தான் ரத்து செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி -லாகூர் இடையிலான பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தான் ரயில்வே அமைச்சராக இருக்கும் வரை எந்த ஒரு ரயிலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஓடாது என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமானவை என்றும் இது குறித்து இந்தியாவுடன் ஆலோசிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு ஏற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், அண்டை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.