தலிபான், ஹக்கானி தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 6 தலைவர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அவை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி நிதியுதவி பெற்று வந்த பாகிஸ்தானுக்கு, அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் சமீபத்தில் வேட்டு வைத்தார். நிதியுதவியை நிறுத்த உத்தரவிட்டார்.
மேலும், தனது நாட்டில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை நிறுத்தும்படியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான் மற்றும் ஹக்கானி தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 6 முக்கிய தலைவர்களை அமெரிக்கா நேற்று சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்தது.
தலிபான் அமைப்பை சேர்ந்த அப்துல் சமத் சைனி, அப்துல் காதீர் பஷீர் அப்துல் பஷீர், ஹபிஸ் முகமது போபலாசி மற்றும் மவுலவி இனயதுல்லா, ஹக்கானி அமைப்பை சேர்ந்த பகீர் முகமது, குலாகான் ஹமிதி ஆகியோர் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும் அமெரிக்கா சார்ந்த இடங்களில் இந்த அமைப்புகளுக்கும், இவர்களுக்கும் உள்ள சொத்துகளை முடக்கவும் உத்தரவிட்டது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில். ‘இந்த அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சார்ந்த தூதரகம் உள்ளிட்ட இடங்களிலும், இந்தியா சார்ந்த தூதரகம் உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த நாடுகளின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் மீதும், தீவிரவாதிகள் மீதும் அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுக்கு தனது மண்ணில் புகலிடமும் உதவியும் அளிக்கக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது.