2021 ஆகஸ்ட் மாத இறுதிக்கு பின்னரும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகளை வைத்திருந்தால் “விளைவுகள்” ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலிபான் தீவிரவாத குழுவின் பேச்சாளர் சுஹைல் ஷாஹீன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட ஆகஸ்ட் 31 என்ற காலக்கெடு ஒரு “சிவப்பு கோடு” என்றும், அது மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், கடந்த செவ்வாய்க்கிழமை ஜி 7 உலக தலைவர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரும் அமெரிக்கப் படைகளை, வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து இந்த நாட்களில், அமெரிக்க படை விலகல் காலக்கெடுவை நீடிப்பது பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் அமெரிக்க ஜனாதிபதி இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.
இதற்கிடையில், இன்று காலை காபூலின் சர்வதேச விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும், அடையாளம் தெரியாதவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது, இதன்போது ஆப்கானிஸ்தான் படை வீரர் ஒருவர் இறந்ததாக ஜெர்மனி இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள், தலிபானின் உறுப்பினர்களா? என்பது குறித்து உடனடியாக எதுவும் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.