புலம்பெயர் ஆப்பானிஸ்தான் மக்கள் ஒன்றியத்தின் ஐரோப்பிய கிளையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலிபான்களிடமிருந்து அப்பாவி ஆப்கான் மக்களை பாதுகாக்குமாறு இந்த அமைப்பு வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சுமார் 250 பேர் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காபூலுக்குள் நுழைந்து தலிபான்கள் ஜனாதிபதி மாளிகையினை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் தலைநகரின் மீது தலிபான் பயங்கரவாதக் குழு கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியதன் பின்னர் , பல நாடுகள் தங்கள் இராஜதந்திர பணியாளர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றின. மேலும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் முயற்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்திற்கு திரண்டனர்.
இந்நிலையில் அந்த மக்களை அழைத்து வர விமானங்களை அனுப்புமாறும் பெர்லினில் உள்ள ஜெர்மன் பாராளுமன்றம் முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா வளாகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
1990 களின் பிற்பகுதியில் தலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது தடை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான கல்வி உட்பட ஏனைய சம உரிமைகள் இன்று மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.