தற்போதுள்ள இந்திய டெஸ்ட் அணியுடன் உலகின் எந்த பகுதிக்கும் பயணம் செய்யலாம் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அனில் கும்ப்ளே கடந்த மாதம் பயிற்சியாளர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக 55 வயதான ரவி சாஸ்திரி நியமிக் கப்பட்டார். மேலும் ஜாகிர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ராகுல் திராவிட் வெளிநாட்டுத் தொடர்களுக்கான பேட்டிங் ஆலோசகராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.
இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறியதாவது:
இதற்கு முன்னர் நாம் இருந்ததை விட தற்போதுள்ள இந்திய அணி சிறந்த டெஸ்ட் அணியாக திகழ்கிறது. இந்த அணியுடன் உலகின் எந்த இடத்துக்கும் நாம் பயணிக்கலாம். அணியில் உள்ள வேகப் பந்து வீச்சாளர்களால் எந்த சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்டு 20 விக்கெட்களை வீழ்த்த முடியும். அவர்கள் சரியான வயதில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
விராட் கோலி ஒரு சாம்பியன் வீரர். அவர் இதுவரை உச்சத்தை எட்டவில்லை. அடுத்த 5 முதல் 6 வருடங்களில் அவர், தன்னை தலைசிறந்த வீரராக வடிவமைத்துக் கொள்வார். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது.
அதனால் யுவராஜ் சிங், தோனி ஆகியோரது எதிர்காலம் குறித்து நேரம் வரும் போது திறன்பட கையாள்வோம். இருவருமே சாம்பியன் வீரர்கள். நான் மீண்டும் வீரர்கள் அறையில் நுழைய உள்ளேன். இதனால் கேப்டன் விராட் கோலியுடன் நேரம் செலவிட்டு பல்வேறு விஷயங்களை முன்னெடுத்துச் செல்வேன்.
எப்போதும் நான் சவாலை விரும்பக்கூடியவன். இதனால் எனது பணியை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். கங்குலியும், நானும் கேப்டன்களாக செயல்பட்ட வர்கள். கடந்த காலங்களில் எங் களுக்குள் சில வாக்குவாதங்கள் நிகழ்ந்தது. ஆனால் நாங்கள் பெரிய பிம்பங்களாக உள்ளோம். நேர்காணலின் போது அவர் சிறந்த கேள்விகளை கேட்டார். இதில் இருந்து நாங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். தனிநபர்கள் விஷயமே இல்லை. அனைவரும் இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக செயல்பட வேண்டும். இதுதான் மைய கருத்தாக இருக்க வேண்டும். இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.