தற்கொலை நெருக்கடிகளை தொடர்ந்து உயர்தர பாடசாலை மாணவர்கள் வெளிநடப்பு.
கனடா-ஒன்ராறியோவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வூட்ஸ்ரொக் என்ற சிறிய நகரில் உள்ள உயர்தர பாடசாலையில் இவ்வருடம் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்து தங்கள் உயிர்களை தாங்களே மாயத்துக்கொண்டனர். இவை குறித்து பாடசாலை வாரியங்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என நம்பும் உயர்தர பாடசாலை மாணவர்கள் செவ்வாய்கிழமை காலை வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பலவீனமானவர்களை கொடுமைப்படுத்துதலே இந்த தற்கொலைகளிற்கு காரணம் என கருதுவதாக மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக போதுமான விழிப்புணர்வு மற்றும் உதவிகள் பாடசாலை திட்டத்தில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் வெளிநடப்பு ஒரு சக்தி வாய்ந்த செய்தியை பாடசாலை சபைகளிற்கு அனுப்பும் எனவும் கூறினார்.
பாடசாலை வாரியங்களும், கனடிய மனநல சங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.
கடந்த ஜனவரியிலிருந்து இதுவரை ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மாணவர்கள் வகுப்புகளில் இருந்து வெளிநடப்பு செய்து வூட்ஸ்ரொக் அருங்காட்சியகத்தின் தேசிய வரலாற்று தளத்தில் உள்ள நீரூற்றை நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர்.
அண்மைக்காலங்களில் குறிப்பிட்ட தற்கொலைகள் நடக்க காரணம் என்ன என்பது அறிய தாங்கள் முயன்று வருவதாகவும் ஆனால் இதுவரை என்ன காரணங்களினால் இவ்வாறு நடக்கின்றன என்பது தெரியவில்லை என லண்டன் கத்தோலிக்க பாடசாலை சபை கண்காணிப்பாளர் கதி வேலொங் தெரிவித்துள்ளார்.
College Avenue Secondary School; Ecole secondaire Notre Dame; Huron Park Secondary School; St. Mary’s Catholic High School; and Woodstock Collegiate Institute ஆகிய ஐந்து உயர்தர பாடசாலைகள் உள்ளன.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து இது வரை 36-பேர்கள் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தியும், தற்கொலை முயற்சிகளிற்கு எத்தனித்தும் உள்ளதாக வூட்ஸ்ரொக் பொலிசார் தெரிவித்துள்ளனர். வூட்ஸ்ரொக் மற்றும் சுற்றியுள்ள ஏழு புறநகர் பகுதிகளிலும் -ஒக்ஸ்வோட் கவுன்ரி உட்பட்ட-இவை நடந்துள்ளது.