சம்பள பிரச்னை தொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி அமைப்பிற்கும் மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் தயாரிப்பாளர்கள் தங்கள் படப்பிடிப்பை வேறு தொழிலாளர்கள் வைத்து நடத்தி கொள்ளலாம் என அறிவித்தது.
இதற்கு பெப்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நடிகர்கள் சம்பளத்தை குறையுங்கள், தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் என்றனர். இதனால் நாளுக்கு நாள் வார்த்தை போர்கள் தொடர, ஒருக்கட்டத்தில் பெப்சியை சேர்ந்த தனபால் என்பவர் பொது தளத்தில் விஷாலை வெட்டுவேன், குத்துவேன் என கொலை மிரட்டல் விடுத்தது போன்ற சம்பவங்களும் அரங்கேறின. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், தனபால் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் பெப்சியின் தலைவர் ஆர்கே செல்வமணி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “நட்புடன் இயங்கி வந்த இரண்டு சங்கங்கள் இடையே பெரிய பகை போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் இல்லாமல் பெப்சி தொழிலாளர்கள் இல்லை. அதேப்போன்று பெப்சி இல்லாமல் படத்தை உருவாக்க முடியாது என்பது தயாரிப்பாளர்களுக்கும் தெரியும். சில நபர்கள் இரண்டு சங்கங்களுக்கும் இடையே இருக்கும் சின்ன உரசலை தீயாக்கி பெரிதுப்படுத்துகின்றனர். அவர்களிடமிருந்து நமது தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும்.
பில்லா பாண்டி படப்பிடிப்பில் பயணப்படியையும் தாண்டி சில பிரச்னைகளும் இருந்தது. ஆனாலும், படப்பிடிப்பை நிறுத்தியது தவறு தான். இதற்காக சம்பந்தப்பட்டவர்களை கண்டித்திருக்கிறோம். 25 ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட ஒரு அமைப்பை உடைப்போம், பெப்சியை தடை செய்வோம் என்று சிலர் தூண்டிவிடும்போது அதை கட்டுப்படுத்துவது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்கே தெரியும்.
இருப்பினும் எங்கள் சங்கத்தை சேர்ந்த தனபால், உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில் தரம் தாழ்ந்த சில தவறான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். இதற்காக எங்கள் சங்கத்தின் சார்பில் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். அதைப்போன்று தனபாலையும் பகிரங்க மன்னிப்பு கேட்க சொல்லியுள்ளோம். ஆகவே இந்த பிரச்னையை இதோடு முடித்து கொண்டு இரண்டு சங்கங்களும் பழையபடி சுமூகமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும். அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு ஏற்படும்.
இவ்வாறு பெப்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.