புதிய அரசியலமைப்பு தொடர்பாக கலாநிதி தயான் ஜயதிலக்கவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் கலந்துக்கொண்ட கருத்தரங்கொன்று கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அங்கு சிறப்புரையாற்றிய தயான் ஜயதிலக்க, சமஷ்டி முறைக்கு மறைமுகமாக ஆதரவளித்து பேசியுள்ளார். நடு நிலையான இடத்திற்கு வர வேண்டும் எனவும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஒற்றையாட்சி குறித்து பேசாது இளம் தலைமுறையினரை கவரும் வகையில் புதிய தொனிப்பொருளை தேட வேண்டும் எனவும் தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இங்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்போதும் நாம் நடுநிலையில் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளதுடன் தயான் கூறும் நடு நிலை சமஷ்டி இல்லையா எனவும் கேட்டுள்ளார்.