தம்பி பிரபாகரன் அவர்கள், அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையும் தழுவியிருக்கலாம். ஆனால், மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வாரமொரு கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாரக் கேள்வி, “உங்கள் சென்ற வாரக் கேள்விக்கான பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரைப் பதில் தர வைத்துள்ளது. அதற்கு உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கின்றோம்” என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதலிளிக்கையில் அவர் மேலும் கூறியதாவது,
“கொழும்புடன் நல்லுறவைப் பேண வேண்டும் என துரைராசசிங்கம் தெரிவிக்கிறார். கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். நாட்டின் மூன்று மொழிகளுடனும் நான்கு மதங்களுடனும் ஓரளவு பரீட்சயம் பெற்றவன். எனவே, தெற்குடன் நடந்து கொள்ள நண்பர் எனக்குச் சொல்லித்தரக்கூடாது. நண்பர் போன்றவர்கள், தெற்குடன் நல்லெண்ணங்கொள்ள வேண்டுமென்றால் அவர்களுக்குப் பணிந்து போக வேண்டும் என்ற கருத்தை உடையவர்களாகத் தென்படுகின்றார்கள்.
“தெற்குக்கு அடங்கிப் போகும் ஒருவரை, முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்திருந்தால், நண்பரைப் போன்ற ஒருவரையே முதலமைச்சராக நிறுத்தியிருக்கும். புகழ்பாடி, பணிந்து, இரந்து, எவரதும் பெரிய மனதின் பெறுபேறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் உரித்துகளைப் பெற வேண்டிய அவசியம் எமக்கில்லை.
“தம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையும் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள். எமது தகைமை உலகறிந்தது.
“எனினும், அந்த உண்மையைக் கொழும்பு உதாசீனம் செய்து வருகின்றது. கொழும்புடன் முரண்படாது எவ்வாறு எமது உரிமையைப் பெற்றெடுப்பது? 2016இல் தக்க தீர்வைப் பெற்று விடுவோம் என்று முரண்படாது வாழ்ந்து வந்த எம் தலைவர் கூறினாரே! பெற்று விட்டோமா?
“இதேவேளை, போர்க் குற்றங்கள், இன அழிப்பு பற்றி நாங்கள் சுமந்திரனுடன் பேசி வந்ததைக் குறிப்பிட்டுள்ளார். நண்பர் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன அழிப்பு என்பது உண்மை. அதை நீதிமன்றில் நிரூபிக்க முடியுமா என்பது இன்னொன்று. நிரூபிக்க முடியாது போகும் என்று சுமந்திரன் கூறிக் காரணங்களை எடுத்தியம்பினார். அதில் இருந்த சட்டச் சிக்கல்களை உணர்ந்து கொண்டேன்.
“ஆனால், வடமாகாணசபை இயற்றிய பிரேரணை மக்களின் கருத்தைப் பிரதிபலித்த ஒன்று. அது சமூகம் சார்ந்தது. உண்மை சார்ந்தது. அதனைச் சர்வதேச அரங்கில் நிரூபிக்க முடியுமா, அதில் உள்ள சட்டச் சிக்கல்கள் எவை என்பன வேறு விடயங்கள்.
“ஆகவே, சட்ட ரீதியாக நான் சுமந்திரனுடன் பேசியதை சமூக ரீதியாகக் கொண்டு வந்த பிரேரணையுடன் கலந்து, நண்பர் குழப்பி அடிக்கக்கூடாது.
“ஊர்த் தேரைச் சேர்த்து இழுக்க வேண்டியது பற்றி நண்பர் கூறியுள்ளார். நாம் யாவரும் ஒன்றிணைந்து இழுக்க வரும்போது, ஒரு சிலர் மட்டும் அமெரிக்கா நோக்கியும் கொழும்பு நோக்கியும் தேரை இழுக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது. அப்படி இருந்தும் நான் தேர் இழுப்பவர்களுடன் கூட்டி, வடத்தில் கைவைத்துக் கொண்டே எனது கருத்தை வெளியிட்டுக் கொண்டு வருகின்றேன். வடத்தைக் கைவிட்டுச் செல்லவில்லை. தேரை நாம் நிர்ணயித்த இடம் நோக்கி நகருங்கள். கொழும்பு நோக்கியும் அமெரிக்கா நோக்கியும் நகர்த்தாதீர்கள் என்று தான் சொல்லி வருகின்றேன்” எனத் தெரிவித்தார்.