கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேக்களப்பா. இவரது மனைவி பச்சையம்மாள். மேக்களப்பா இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு மாதப்பன் (வயது 35), நாகராஜ் (வயது28) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மாதப்பன் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். மாதப்பனின் தம்பி நாகராஜ் கார்பெண்டர். நாகராஜ் குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி நாகராஜுக்கும், மாதப்பன் மனைவி வரலட்சுமிக்கும் மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு நாகராஜ் குடித்துவிட்டு வரலட்சுமியின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாதப்பன் நாகராஜை சரமாரியாக கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், மாதப்பன் சூளகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.