சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்றக் கோரி விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில், தங்களது மாநில உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்று தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், மேற்குவங்கம், கர்நாடக மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற முழு நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், இந்த கோரிக்கைகளை ஏற்பதில்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், முந்தையை முடிவை மறுபரிசீலனை செய்யும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக் கொண்டதாகவும், ஆனால், உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சட்டத்துறை சார்ந்த ஆவணங்களை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க அரசு உறுதி பூண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சட்டத்துறை சார்ந்த ஆவணங்களுக்கு என்று அனைத்து மாநில மொழிகளிலும் பொதுவான சொற்களஞ்சியத்தை ஏற்படுத்த ஓய்வூபெற்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்