நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லாமல், தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்ற அரசமைப்புத் தீர்வை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். அதனை இனியும் இழுத்தடிக்க முடியாது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.
இடைக்கால அறிக்கை மீது அரசியல்நிர்ணய சபையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ் மக்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்கள் யார்? இனிமேலும் இவ்வாறான நிலமை ஏற்படக் கூடாது. தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்ற அரசமைப்புத் தீர்வு அவசியமாகும்.
இது தொடர்பாக இலங்கை அரசும், பன்னாட்டுச் சமூகமும் இணைந்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பன்னாட்டுச் சமூகத்துக்காக நிறைவேற்ற வில்லை. எமது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிறைவேற்றப்பட்டது.
நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளதக்க, சிறுப்பான்மையினர் மீது ஆதிக்கம் செலுத்தாத கொள்கை தயாரிக்க வேண்டியுள்ளது. இதற்கு எதிராகச் சுயநலக் கொள்கையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் நாட்டில் கறைபடிந்த சூழல் உருவாகுவதற்குப் பொறுப்பானவர்கள் தற்போதைய அரசியல் தலைவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். அரசியல் கைதிகளை விடுவித்தால் வாக்குக் கிடைக்காது என்று அரசு அஞ்சு கின்றதா? வாக்குகளைப் பார்த்து செயற்பட்டால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
ஊடகவியலாளர்கள் கடத்தல், கொலைகள் மற்றும் ஏனைய கொலைச் சம்வங்களுக்கு எதிராக இன்னும் நீதி நிலை நாட்டப்படவில்லை. அனைத்தும் தாமதப் போக்கில் உள்ளன. இது மக்கள் மத்தியில் விமர்சனத்திற்குரிய காரணமாக அமைந்துள்ளது.
காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வன திணைக்கள அதிகாரிகளின் செயற்பாடு மோசமாக உள்ளது. புதிய வன திணைக்களத்தின் எல்லை நிர்ணயங்கள் உறுதிப்படுத்த வேண்டும். மகாவலி அதிகார சபை மூவின மக்களுக்குச் சார்பாக நடக்க வேண்டும். வேறு இனக் குடியேற்றங் கள் செய்யப்படக் கூடாது.
வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். 13ஆவது திருத்தம் மூலம் குறித்த மாகாணங்கள் இணைக்கப்பட்டன. வடக்கு – கிழக்கு தாமாகவே இணைவதற்கு இடமளிக்க வேண்டும்.
இந்த விடயத்தில் கொழும்பு அரசு பலாத்காரம் செய்யக் கூடாது. இனப்படுகொலை என்ற அசிங்கம் இந்த நாட்டில் இடம்பெற்றது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசமைப்பை உருவாக்க முன்வர வேண்டும் – – என்றார்.