“காணி விடுவிப்புக்கு மகிந்த அணியினரே தடையாக இருந்து வந்தனர். பசில் ராஜபக்ச, காணி விடுவிப்பை தாங்கள் எதிர்க்கவில்லை என்பது எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. பசில் ராஜபக்ச கூறிய விடயங்களை மகிந்த அன்று கேட்டிருந்தால் அவர் இன்றும் ஆட்சியில் இருந்திருப்பார். கோத்தபாய கூறியதைக் கேட்டதாலேயே மகிந்தவுக்கு இந்தநிலை”
இவ்வாறு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காணி விடுவிப்புக்கு தாங்கள் எதிர்ப்பில்லை என்று வடக்கில் வைத்து பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை தொடர்பில் ராஜிதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“காணி விடுவிப்புக்கு மகிந்த அணியில் பசில் ராஜபக்ச எதிர்ப்பு இல்லை என்று தெரிவித்தமை வரவேற்கத்தக்கது. இதன் பின்னர் வடக்கு மக்களின் காணிகளை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விடுவிக்கலாம் எனக் கருதுகின்றோம். காணி விடுவிப்புக்கு மகிந்த அணியினரே தடையாக இருந்தனர். பசில் ராஜபக்ச கூறியுள்ள விடயம் எமக்கு உற்சாகத்தை தருகிறது.
பன்னாட்டுச் சமூகத்தினுள்ளேயே இலங்கை இருக்கின்றது என்பதைப் புரிந்து பசில் ராஜபக்ச செயற்பட்டார். ஆனால் அவர் கூறியவற்றை மகிந்த கேட்கவில்லை. மகிந்த ராஜபக்ச, கோத்தா கூறியவற்றையே கேட்டுக்கொண்டிருந்தார்” என்று ராஜித பதிலளித்தார்.